விஷ்ணு என்ற தன் பெயரை ‘விஷ்ணு விஷால்’ என்று மாற்றிக்கொண்டிருக்கிறார் விஷ்ணு. ‘கலக்குற மாப்ளே’, ‘முண்டாசுப்பட்டி’ படங்களின் இறுதிகட்ட படப்பிடிப்பில் இருந்தவரை சந்தித்துப் பேசினோம்.
நீர்ப்பறவை வெளியாகி ஒரு ஆண்டு ஆச்சே? அடுத்த படம் ஏன் இன்னும் வரலை?
‘‘சில படங்கள் நல்ல போகலைன்னு தெரிஞ்சதுமே அடுத்தடுத்த படங்களை தேர்வு செய்றதுல கொஞ்சம் நேரம் எடுத்துக்கிட்டேன். நீர்ப்பறவை படத்துல, மத ஒற்றுமை, இலங்கைப் பிரச்சினை, குடிப்பதானால் உண்டாகும் பாதிப்புனு நிறைய விஷயங்கள் இருந்துச்சு. எங்க ஒட்டுமொத்த டீம் நெனச்ச ரிசல்ட் கிடைத்தது. ஆனாலும் வியாபார ரீதியா கொஞ்சம் சறுக்கல்தான். நிறையபேர் படத்தை ரொம்பவே ரசித்தாங்க. இளைஞர்கள் மத்தியில், ‘எதோ மெசேஜ் சொல்ல வர்றாங்க!’ என்று எடுத்துக்கிட்டாங்கப் போல. இப்போ 5 படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கேன். எல்லா படமும் நீர்ப்பறவை படத்தில் நடித்ததால கிடைத்த வாய்ப்புதான்!”
உங்க சக நடிகர்களான விஜய்சேதுபதி, சிவகார்த்திக்கேயன், விமல் எல்லோரும் பட்டைய கிளப்புறாங்கப் போல?
‘‘நல்ல நல்ல படங்கள் சமீபத்துல வருது. என்னோட அறிமுகமான நாயகர்கள் எல்லாம் பெரிய அளவில் வந்துட்டாங்க. ரொம்பவே சந்தோஷம். நான் இன்னும் சரியான ஹியூமர் படங்களை தொடவில்லை. அந்த மாதிரி கதைகள் எனக்கு இன்னும் சரியா அமையலைனுதான் சொல்லணும். இதுக்கு முன் எமோஷனல், சோகம்னுதான் என்னை பார்த்தாங்க. அவங்க கலக்கின அந்த லெவல் காமெடி படங்கள் இனி இருக்கும். அதில் நிறைய வித்யாசமும் காண்பிப்பேன்.”
சுசீந்திரனோட மீண்டும் கூட்டணி சேருறீங்க? அந்தப் படம் எந்த அளவுல இருக்கு?
‘‘அவர் படங்கள்ல எப்பவும் ஏதாவது சிறப்பம்சம் இருக்கும். சமீபத்துல வந்த ’ஆதலால் காதல் செய்வீர்’ படத்துலகூட அற்புதமான கதைக்கரு வைத்திருந்தார். அவர் கூட ’வீர தீர சூரன்’ படம் பண்றேன். வெண்ணிலா கபடிக்குழு போல இதுல சூரி இருக்கார். காமெடிக்கு அளவே இல்லைனு பேர் வாங்குற படமா இது அமையும்.”
அப்பா காவல்துறையில் இருப்பதால் அந்த அனுபவத்தோட காவல்துறை சம்மந்தப்பட்ட படம் ஒண்ணு பண்ணலாமே?
‘‘துரோகி, குள்ளநரிக் கூட்டம் ரெண்டு படத்துலயும் அதுக்கு சின்னதா முயற்சி பண்ணியிருப்பேன். இன்னும் படத்தில் காவல்துறை காஸ்ட்யூம்ஸ்கூட பயன்படுத்த ஆரம்பிக்கவில்லை. அந்த துறையில் நிறைய விஷயங்கள் இருக்கு. சரியான நேரம் அமையும்போது பார்க்கலாம்.”
உங்க காதல் மனைவி ரஜினி விஷ்ணு படம் இயக்கப்போறாங்களாமே?
‘‘என்னை உற்சாகப் படுத்தறதே என் மனைவி ரஜினிதான். அவங்க விஸ்காம் படிச்சவங்க. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இயக்கியிருக்காங்க. ’நீர்ப்பறவை’, ’வணக்கம் சென்னை’ ரெண்டு படத்திலும் உதவி இயக்குநரா பணியாற்றிய அனுபவம் இருக்கு. இப்போ ரொம்பவே வேகமா திரைக்கதை உருவாக்கிக்கிட்டிருக்காங்க. அடுத்த வருஷம் அவங்க படத்துல நடிக்கப்பொறேன். கூடவே இருந்து என்னை உத்வேகப்படுத்திக்கிட்டே இருக்குற என் மனைவி படத்தில் நடிக்க நானும் ஆவலோட காத்துக்கிட்டிருக்கேன்.
இளம் நடிகர்கள்ல யார் நடிப்பு உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்?
‘‘ விஜய் சேதுபதி படங்கள் ரொம்பவே பிடிச்சிருக்கு. கேரக்டருக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுக்குறார். சமீபத்துல வந்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.. படத்தை இன்னும் பார்க்கவில்லை. நண்பர்கள் எல்லோரும் நல்லா இருக்குனு சொன்னாங்க. அவரோட வித்தியாசமான நடிப்பு எனக்கு பிடிக்கும். “
உதயநிதி ஸ்டாலின் உங்களுக்கு நெருங்கிய நண்பராமே?
‘‘ஆமாம். நீர்ப்பறவை பட ஷூட்டிங் அப்போதான் உதய் பழக்கம். ஈடுபாட்டோட நடிப்பதை பாராட்டுவார். ’படம் வியாபார ரீதியா போகலையேனு கவலைப்பட வேண்டாம். எங்க அப்பாவே இந்த படத்தை பார்த்துட்டு, நல்ல படம் எடுத்திருக்க! என்று பாராட்டினாங்க. இதுக்கு முன்னாடி அப்படி பாராட்டினதே இல்லை. உன்னோட உழைப்பு கைக்கொடுக்கும். ரெட் ஜெயின் மூவீஸ் எப்பவும் நிச்சயம் கைக்கொடுக்கும்!’ ம்னு சொன்னார். அதேபோல சுசீந்திரனோட அடுத்த படத்துல நடிக்கிற வாய்ப்புக்கு நடிகர் விஷால் முக்கிய காரணம். என்னை ஆர்வப்படுத்துற உதய், விஷால் ரெண்டு பேரையும் நெருங்கிய நண்பர்களாக பெற்றது என் அதிர்ஷ்டம்.”