தமிழ் சினிமா

சார்லி ரீமேக்: மாதவனுக்கு நாயகியாக சாய்பல்லவி ஒப்பந்தம்

ஸ்கிரீனன்

தமிழில் உருவாகவுள்ள 'சார்லி' ரீமேக்கில் மாதவனுக்கு நாயகியாக சாய்பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

2015-ம் ஆண்டின் கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கணக்கில் கொண்டு கேரளாவில் வெளியான மலையாளப் படம் 'சார்லி'. துல்கர் சல்மான், பார்வதி மேனன், அபர்ணா கோபிநாத், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தை மார்டின் ப்ராகாட் இயக்கினார். ஃபைண்டிங் சினிமா என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது.

மலையாளத்தில் இப்படத்துக்கு இளைஞர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்தது. வசூலையும் வாரிக் குவித்தது. இப்படத்தின் ரீமேக் உரிமையை, இந்தி திரையுலகில் பிரபல நிறுவனமான பிரமோத் பிலிம்ஸ் கைப்பற்றியது.

துல்கர் சல்மான் வேடத்தில் மாதவன் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. இப்படத்தை இயக்குநர் விஜய் இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். நாயகியாக சாய் பல்லவி ஒப்பந்தமாகியுள்ளார். இசையமைப்பாளராக லியோன் ஜேம்ஸும், ஒளிப்பதிவாளராக நிரவ் ஷாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.

தற்போது ஜெயம் ரவி நடிக்கும் 'வனமகன்' படத்தை இயக்கி வருகிறார் விஜய். அப்படத்தைத் தொடர்ந்து 'சார்லி' ரீமேக் பணிகளில் கவனம் செலுத்தவுள்ளார் விஜய்.

SCROLL FOR NEXT