தயாரிப்பாளர் சங்கம் குறித்து அவதூறாக பேசியதற்காக விஷால், ஒரு வாரத்தில் மன்னிப்புக் கோர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் அவசரக் கூட்டம் சென்னையில் உள்ள தென்னிந்திய வர்த்தக சபை கட்டிடத்தில் நடைபெற்றது. அதில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.
இக்கூட்டத்தில் நடிகர் விஷால் வாரப் பத்திரிகைக்கு அளித்த பேட்டி குறித்து விவாதிக்கப்பட்டது. அப்பேட்டிக்கு அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வற்புறுத்தினார்கள். ஆனால் மன்சூர் அலிகான் உள்ளிட்டவர்கள் விஷாலுக்கு ஆதரவாக தங்களுடைய கருத்துக்களை வெளியிட சில நிமிடங்கள் சலசலப்பு ஏற்பட்டது.
இறுதியாகக் கூட்டத்தில் முடிவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், "திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமை விற்பனையாகாத காரணத்தினால், இனி வரும் காலங்களில் தொலைக்காட்சி ஒளிப்பரப்பை டெலிகாஸ்ட் பேசிஸில் ஒளிபரப்புவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பெருகிவரும் தயாரிப்பு செலவுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் 50 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோர் அவர்களது சம்பளத்தில் 30% குறைத்துக் கொள்ள வேண்டும்.
சிறு முதலீட்டு திரைப்படங்களை குறிப்பிட்ட நாட்களில் வெளியிடுவதற்காக தயாரிப்பாளர்களுக்கு விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும்.
நமது சங்க உறுப்பினர் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தினை அவமரியாதை செய்யும் வகையில் பேட்டியளித்துள்ளார். அதனை இந்த ஆலோசனை கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. அதன் அடிப்படையில் இன்றிலிருந்து ஒரு வார காலத்திற்குள் விஷால் தனது பேட்டிக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். அப்படி செய்யாத பட்சத்தில் விஷால் தன் தீபாவளி வெளியீடாக அறிவித்துள்ள 'கத்தி சண்டை' திரைப்படம் தவிர்த்து அவர் நடிக்கும் மற்ற எந்த தமிழ் திரைப்படங்களுக்கும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களும் ஒத்துழைப்பு வழங்குவதில்லை" ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.