'கத்தி' படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை வாங்கி, பவன் கல்யாணை நடிக்க வைக்க தயாரிப்பாளார்கள் முயற்சி செய்து வருகிறார்கள்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா, சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தீபாவளியன்று வெளியாகி இருக்கும் படம் 'கத்தி'. உலகமெங்கும் வார இறுதியில் சுமார் ரூ.30 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியிருப்பதால் படக்குழு சந்தோஷத்தில் இருக்கிறது.
கோயம்புத்தூர் ஹிந்துஸ்தான் கல்லூரியில் 'கத்தி' படத்தின் வெற்றி விழா இன்று மாலை நடைபெற இருக்கிறது. இதில் கலந்துகொள்ள விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், அனிருத் மற்றும் சதீஷ் கோயம்புத்தூர் சென்றிருக்கிறார்கள்.
'கத்தி' படத்தின் தெலுங்கு பதிப்பு இன்னும் வெளியாகவில்லை. படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், தெலுங்கு ரீமேக் உரிமையைக் கைப்பற்றி பவன் கல்யாணை விஜய் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க தெலுங்கு தயாரிப்பாளர்கள் முயற்சி செய்து வருகிறார்கள்.
இது குறித்து 'கத்தி' தயாரிப்பாளருக்கு நெருக்கமானவர்கள் கூறும்போது, "'கத்தி' படத்தை தெலுங்கு ரீமேக்கை தயாரிக்க பல்வேறு தயாரிப்பாளர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். ஆனால், இன்னும் ரீமேக் உரிமை யாருக்கும் வழங்கப்படவில்லை. பவன் கல்யாணை விஜய் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறார்கள்" என்று தெரிவித்திருக்கிறார்கள்.
ஆனால், விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இருவருக்குமே தெலுங்கில் நல்ல பிசினஸ் இருப்பதால், தெலுங்கில் டப்பிங் செய்தே வெளியிடலாம் என்ற ஆலோசனையிலும் இறங்கியிருக்கிறது படக்குழு. தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடவே நடிகர் விஜய் தரப்பு விரும்புகிறதாம்.