என் குருநாதர் பாலுமகேந்திராவின் படத்துடன் என் படத்திற்கும் விருது கிடைத்தது பெரும் மகிழ்ச்சி என்று இயக்குநர் ராம் கூறினார்.
‘தங்கமீன்கள்’ திரைப்படம் சிறந்த தமிழ்த் திரைப்படமாகத் தேர்வு செய்யப்பட்டது குறித்து இயக்குநர் ராம் கூறியதாவது:
என் குருநாதர் பாலுமகேந்திரா வின் படத்துடன் என் படத்திற்கும் விருது கிடைத்தது பெரும் மகிழ்ச்சி. மராட்டிய படமான ‘ஃபான்ட்ரி’ திரைப்படம்தான் இந்தியாவின் சிறந்த படமாகத் தேர்வாகும் என்று இருந்தேன். என்னை மிகவும் சிலிர்க்க வைத்தப்படம் அது.
‘தங்கமீன்கள்’ படத்தைப் பார்த்துவிட்டு நிறைய குழந்தை கள் ‘இந்த பள்ளியில் அதிக கட்ட ணம். வேறு பள்ளியில் சேர்த்து விடுங்கள்’ என்று தங்கள் பெற் றோரைக் கேட்டதும், ‘என் மகன் மக்கு இல்லை’ என்று போகிற இடத்தில் பெற்றோரே சொன்ன சம்பவங்களும் நடந்திருக்கின்றன.
சாதனாவுக்கு விருது கிடைத்திருப்பது கூடுதல் மகிழ்ச்சி. என் நண்பன் நா.முத்துக்குமாருக்கு விருது கிடைக்க வேண்டும் என்று நீண்ட காலமாகவே நினைத்து வந்தேன். இப்போது அதுவும் நிறைவேறிவிட்டது. இந்தப்படத்தை விருது வரைக்கும் கொண்டு சென்றது ஜே.எஸ்.கே சதீஸ்குமார்தான். அவருக்கும் நன்றி.
சிறந்த பாடலாசிரியருக்கான விருது பெற்றது குறித்து பாடலாசிரியர் நா.முத்துக்குமார் கூறியதாவது:
அம்மாவுக்கும், மகன்களுக்கு மான பாடல்கள் இங்கே நிறைய வந்திருக்கிறது. தந்தைக்கும், மகளுக்குமான பாடல் மிகவும் குறைவுதான். இந்த விருது அந்த அடிப்படையில்தான் தேர்வுக்குள்ளாகியிருக்கும் என்று நினைக்கிறேன். இன்னும் தரமான பாடல்களை கொடுக்க வேண்டும் என்கிற பொறுப்புணர்வை இந்த விருது கொடுக்கிறது.
திருவள்ளுவர் ஒரு இடத்தில் ‘மெய்த் தீண்டல் உயிருக்கு இன்பம், மொழி கேட்டல் செவிக்கு இன்பம்’ என்று கூறியிருப்பார். மொழி கேட்டல் செவிக்கு இன்பம் என்ற அந்த நினைவுகளோடு எழுதப்பட்ட பாடல்தான் ‘ஆனந்த யாழை’ பாடல். இயக்குநர் ராம், இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, தயாரிப்பாளர்கள் கௌதம் வாசுதேவ்மேனன், ஜே.எஸ்.கே சதீஸ் ஆகியோருக்கு நன்றி. இந்த விருதை என் குருநாதர் பாலுமகேந்திரா, இயக்குநர் ராமின் மகள் சங்கர கோமதி, என் மகன் ஆதவன் நாகராஜ் ஆகிய மூவருக்கும் சமர்ப்பிக்கிறேன்.