வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த், ப்ருத்விராஜ் நடித்திருக்கும் 'காவியத்தலைவன்' நவம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த், ப்ருத்விராஜ், வேதிகா, அனைகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'காவியத்தலைவன்'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கும் இப்படத்தை வருண் மணியன் மற்றும் சசிகாந்த் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முன்பே முடிவுற்றாலும், இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் நடைபெறுவதாக அமைந்துள்ள கதை என்பதால் கடும் சிரத்தை எடுத்து பின்னணி இசை சேர்த்து வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
தற்போது 'காவியத்தலைவன்' நவம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள். இது குறித்து இயக்குநர் வசந்தபாலன், " நவம்பரில் 'காவியத்தலைவன்' வெளியீடு என்று விளம்பரங்கள் வந்த வண்ணம் உள்ளன. அந்த தேதியில் 'ஐ', 'உத்தமவில்லன்', 'அநேகன்' போன்ற பெரிய படங்கள் வராமல் இருக்க வேண்டும். அப்போது தான் 'காவியத்தலைவன்' போதிய கவனம் பெறும். இதற்கு போட்ட உழைப்பு மிகப் பெரியது. இரண்டரை வருட உழைப்பு என்னுடையது. தயாரிப்பாளருக்கும் பெரும் பணத்தை முதலீடு செய்துள்ளார்.இறைவன் நம்மோடு இருப்பாராக" என்று கூறியிருக்கிறார்.