தன்னை கலாய்ப்பவர்கள் படைப்பாற்றலின்றி இருப்பதாக சிம்பு அளித்துள்ள பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு, ஸ்ரேயா, தமன்னா, மஹத், வி.டி.வி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'. யுவன் இசையமைத்துள்ள இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ளார். ஜூன் 23-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்துக்காக சிம்பு அளித்துள்ள பேட்டியில், தன்னை கலாய்ப்பவர்களின் நிலைக் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
"என்னை வெறுப்பவர்களால் மட்டுமே என் நிலை ஏறிக்கொண்டே உள்ளது. அவர்கள் என்னை விட்டுவிட்டால், எனது நிலை இறங்கிவிடும். முன்பு, என்னை கலாய்ப்பதற்கு கொஞ்சம் நன்றாக யோசிப்பார்கள். இப்போது அவர்கள் என்னை கலாய்க்கும் விதம் சுமாராகிவிட்டது. அவர்களுக்கு படைப்பாற்றல் பிரச்சினை வந்துவிட்டது என நினைக்கிறேன். என்னை கலாய்க்க வேண்டுமானால், சில நாட்கள் யோசித்து நல்லபடியாக கலாய்த்துக் கொள்ளுங்கள். அவசரப்பட்டு மொக்கையாக செய்யாதீர்கள்.
டீஸர் வெளியானவுடனே, அவசரப்பட்டு கலாய்த்தார்கள். 10 பேர் உட்கார்ந்து கலந்து ஆலோசித்து பேசி செய்திருக்கலாம். அவர்களுடைய கலாய்ப்பை எல்லாம் பார்க்கும் போது பாவமாக உள்ளது. என்னடா இது இந்தளவுக்கு content இல்லாமல் இருக்கிறார்களே என நினைத்தேன். அவர்களுடைய கலாய்ப்பை பார்த்து கோபமும் வரமாட்டேன் என்கிறது, கலாய்க்கவும் தோன்றவில்லை. நல்ல content வைத்து கலாய்த்தால், 10 எதிர்வினைகள் கொடுத்திருப்பேன். இப்போதெல்லாம் என்னை கலாய்ப்பவர்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறேன். அவர்களுடைய நேரம் முடிந்துவிட்டது என நினைக்கிறேன்.
அதுமட்டுமன்றி, கலாய்ப்பைப் பார்த்தவுடனே நான் ஏதாவது சொல்வதற்குள் எனது ரசிகர்களே பதிலுக்கு கலாய்த்துவிடுகின்றனர். ரசிகர்களே எதிர்வினைக் கொடுக்க தொடங்கியதால், நான் ஃப்ரீயாகிவிட்டேன். தற்போது வெறுமனே ரசிக்கும் இடத்துக்கு வந்துவிட்டேன். "