சசிகுமாரை நாயகனாக வைத்து பாலா இயக்கவிருக்கும் படத்திற்கு இளையராஜா இசையமைத்து இருக்கிறார். 12 பாடல்களை 6 நாட்களில் முடித்துக் கொடுத்திருக்கிறார்.
'பரதேசி' படத்தைத் தொடர்ந்து பாலாவின் அடுத்த படம் குறித்த செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. விக்ரம், அதர்வா, விஷால் என பலரது பெயர்கள் அச்செய்தியில் இடம்பிடித்தன.
ஆனால், சசிகுமார் நடிக்கவிருக்கும் படத்தை இயக்கவிருக்கிறார் பாலா. இப்படத்திற்காக மீண்டும் இளையராஜாவுடன் கூட்டணி அமைத்திருக்கிறார்.
'பரதேசி' படத்திற்கு ஒளிப்பதிவு செய்த செழியன் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். சசிகுமாருடன் யாரெல்லாம் நடிக்க இருக்கிறார்கள் என்பது குறித்து எதுவும் தெரியவில்லை.
ஆனால், இப்படத்திற்கான பாடல்களை 6 நாட்களில் முடித்துக் கொடுத்திருக்கிறார் இளையராஜா. மொத்தம் 12 பாடல்கள் இப்படத்தில் இடம்பெற இருக்கிறது. இப்படத்தின் பாடல்கள் தயாரான விதத்தை யூ-டியூப் தளத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறார்கள்.
கரகாட்டக் கலைஞர்களை மையப்படுத்திய கதை என்பதால் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் தஞ்சாவூரில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமன்றி, படத்திற்கு 'கரகாட்டம்' என்று தலைப்பிட்டு இருப்பதாகவும், இப்படத்தினை பாலா - சசிகுமார் இருவருமே இணைந்து தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.