'க்ரிஷ் 3' படத்தினைப் பார்த்த விஜய், ஹிருத்திக் ரோஷன் உழைப்பை வெகுவாக பாராட்டியிருக்கிறார்.
ஹிருத்திக் ரோஷன், ப்ரியங்கா சோப்ரா, விவேக் ஒப்ராய், கங்கனா ராவத் நடிக்க, ராகேஷ் ரோஷன் தயாரித்து, இயக்கிய படம் 'க்ரிஷ் 3'. இப்படம் வெளியாகி இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
200 கோடிக்கு மேல் வசூல், மொபைல் கேம் பதிவிறக்கத்தில் முதல் இடம் என பல்வேறு சாதனைகளை இப்படம் பெற்றிருக்கிறது.
படத்தினை விளம்பரம் செய்யும் விதத்தில், சென்னை வந்திருந்தார் ஹிருத்திக் ரோஷன். அவ்விழாவில் விஜய்யின் செய்தித் தொடர்பாளர் கலந்து கொண்டு பேசினார்.
“'க்ரிஷ் 3' படத்தினை விஜய் தனது குடும்பத்தினருடன் கண்டு ரசித்தார். ஹிருத்திக் ரோஷனின் கடுமையான உழைப்பைப் பார்த்து மிகவும் வியந்து விட்டார்.
இதுபோன்ற ஒரு இந்திய சாகசப் படத்தினைப் பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது என்று குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஹிருத்திக் ரோஷனை நேரில் பாராட்ட வேண்டும் என்று நினைத்தார்.
ஆனால் தொடர்ச்சியாக 'ஜில்லா' படப்பிடிப்பு நடைபெற்று வருவதால், அவரால் கலந்து கொள்ள இயலவில்லை” என்று கூறினார்.