சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படத்தின் தலைப்பு 'துருவன்' அல்ல என்று படக்குழு மறுப்பு தெரிவித்தது.
மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பல்கேரியா நாட்டில் துவங்கப்பட்டது. சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். ஒளிப்பதிவாளராக வெற்றி பணியாற்றி வருகிறார்.
காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் அஜித்துடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். முதற்கட்ட பல்கேரியா படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பியிருக்கிறது படக்குழு.
இப்படத்தின் தலைப்பு 'துருவன்' என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்தலைப்பு குறித்து படக்குழுவிடம் விசாரித்த போது "கண்டிப்பாக 'துருவன்' தலைப்பாக இருக்காது. அஜித் எப்போதுமே அவருடைய கதாபாத்திரத்தை போற்றும் விதமாக தலைப்பு வைக்க விரும்பமாட்டார்.
நாங்கள் இன்னும் தலைப்பு ஆலோசனையில் இறங்கவில்லை. அஜித்தின் திரையுலக வாழ்வில் மிக அதிகப் பொருட்செலவில் உருவாகும் படமாக இப்படம் அமைந்திருக்கிறது. ஆகையால் முதலில் படத்தின் பணிகளை முடித்துவிட்டுத்தான் படத்தலைப்பு பற்றி ஆலோசிக்க இருக்கிறோம்" என்று தெரிவித்தார்கள்.