இந்தியில் அறிமுகமானாலும் முழுக்க தமிழ் பட நாயகியாக மாறிவிட்டார் ஹன்சிகா. ‘போகன்’ படப்பிடிப்பில் இருந்த அவரை சந்தித்தோம். வரும் 9-ம் தேதி பிறந்தநாள் என்பதால், மிகுந்த உற்சாகத்துடன் பேசினார். இனி அவருடன்..
இந்த பிறந்தநாளுக்கு நீங்கள் குழந்தைகளைத் தத்தெடுக்கப் போவதில்லையாமே?
கடந்த பிறந்தநாளுக்கு 5 குழந்தைகளை தத்தெடுத்தேன். அவர்களையும் சேர்த்து மொத்தம் 31 குழந்தைகள் இருக்கிறார்கள். அதனால், இதற்கும் மேல் வேறு ஏதாவது செய்ய வேண்டும் என தோன்றியது. அதனால் சொந்தமாக இடம் வாங்கி அங்கு குழந்தைகள், முதியோர் இல்லம் கட்டும் பணிகளைத் தொடங்கியுள்ளேன். அதற்கான வேலை தீவிரமாக நடந்துவருகிறது.
சவாலான கதாபாத்திரங்களில் நீங்கள் நடிப்பதற்கு உங்கள் ‘அமுல் பேபி’ தோற்றம் தடையாக இருப்பதாக நினைக்கிறீர்களா?
நானும் சவாலான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். அரண்மனை 1, 2 என்னை ஒரு நல்ல நடிகையாக மக்களிடம் நிலைநிறுத்தியது. சவாலான கதாபாத்திரங்கள் என்னைத் தேடி வந்துகொண்டுதான் இருக்கின்றன. அவற்றில் என் மனதுக்கு பிடித்தவற்றை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன்.
இந்தி, தெலுங்கு, தமிழ் சினிமா உலகங்களில், உங்கள் மனம் கவர்ந்தது எது? ஏன்?
எந்த மொழியானா லும் ரசிகர்களின் மனம் கவரும் படங்களில் நடிப்பேன். இருந் தாலும் தமிழ் திரையுலகைச் சேர்ந்தவளாகவே என்னை கருது கிறேன். தமிழ் திரை யுலகத்துடன் அதிக நெருக்கத்துடன் இருப்பதாக உணர்கிறேன்.
நீங்கள் ‘ஓவர் ஆக்ட்’ செய்யும் நடிகை என்ற கருத்து பலருக்கும் உள்ளது. இதை யாராவது உங்களிடம் நேரில் கூறியிருக்கிறார்களா?
உணர்வுகளை நான் மிக ஆழமான பாவனைகளாக வெளிப்படுத்துகிறேன் என்று என் அம்மாவும் அடிக்கடி சொல்வார். இருந்தாலும் ரசிகர்கள் மத்தியிலும் என் நடிப்பை பற்றி இப்படி ஒரு விமர்சனம் நிலவுவது மகிழ்ச்சியே.
தமிழில் நீங்கள் நடித்த கதாபாத்திரங்களில் உங்களை மிகவும் கவர்ந்தது எது?
எந்தவொரு கதாபாத்திரமானாலும், எனக்கு பிடித்திருப்பதால்தானே அதை தேர்வு செய்து நடிக்கிறேன். அதனால், இதுதான் சிறந்தது என்றெல்லாம் நான் தரம் பிரித்துப் பார்ப்பதில்லை. இருப்பினும் எனக்கு மிகவும் பிடித்தது ‘அரண்மனை’ கதாபாத்திரம். அதற்கு சுந்தர்.சி சாருக்கு நன்றி!
தமிழ் ரசிகர்கள் பற்றி..
நான் இருக்கும் இந்த நிலைமை என் ரசிகர்கள் கொடுத்தது. எப்போதெல்லாம் ரசிகர் கூட்டத்தைப் பார்க்கிறேனோ, அது ஒரு காந்தம்போல என்னை இழுத்துக் கொள்கிறது. ரசிகர்களோடு பேசுவதை பெரிதும் நேசிக்கிறேன். என் பிறந்தநாள் வரப்போகிறது என்றால் ஒரு மாதத்துக்கு முன்னதாகவே கொண்டாட்டம் களை கட்டிவிடும். காரணம், ரசிகர்கள் எனக்காக அனுப்பும் வாழ்த்துகளும் பரிசுகளும்!
தமிழ் சினிமாவில் உங்கள் இலக்கு என்ன? அதை எட்ட என்ன முயற்சி எடுத்திருக்கிறீர்கள்?
படம் பார்க்கும் ரசிகர்கள் சந்தோஷமாக, திருப்தியாக இருக்கவேண்டும். அதுதான் என் இலக்கு. அதை அடைய கடின மாக உழைக்கிறேன். கடின உழைப்பின்போது சோர்வு ஏற்படுவதும் உண்டு. இருந்தும் என் ரசிகர்களுக்காக அவற் றைக் கடந்து செல்கிறேன்.
திரைக்குப் பின் ஹன் சிகா எப்படி?
நான் ரொம்ப மகிழ்ச்சி யான நபர். என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் போன்றது. நானும் அதேபோல வெளிப்படைதான். சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக செயல்படுகிறேன். மக்களுக்கு என்னைப் பற்றி நிறைய தெரியும். அனைவரையும் போல எனக்கும் உணர்வுகள், சோகங்கள் உண்டு. சில நேரம் கூக்குரலிட்டு அழுவேன். ஆனால், எவ்வளவு துயரம் என்றாலும், இரவு தூங்கச் செல்லும் முன்பு சோகங்களை இறக்கிவைத்து விடுவேன். ஏனென்றால், நமக்கு கிடைத்த இந்த சிறிய வாழ்க்கை கவலைகளுக்கானது அல்ல.
நம்பிக்கையோடு கூறி விட்டு, உற்சாகத்துடன் விடைபெற்றார் ஹன்சிகா.