ரஜினி நடிப்பில் தயாராகிவரும் 'லிங்கா' படத்தின் இசை நவம்பர் 9-ஆம் தேதி வெளியாகிறது. ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12-ல் படம் ரிலீஸாகிறது.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா, தேவ் கில், சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி வரும் படம் 'லிங்கா'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் முக்கிய காட்சிகள் அனைத்துமே படமாக்கப்பட்டு முடிவுற்றன. ரஜினியின் அறிமுகப் பாடல் மற்றும் ரஜினி, அனுஷ்கா பங்குபெறும் பாடல் ஒன்றையும் காட்சிப்படுத்த இருந்தது.
'லிங்கா' படத்தின் இசையை ஈராஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. நவம்பர் 9-ஆம் தேதி படத்தின் இசையை வெளியிட இருக்கிறார்கள். ஈராஸ் நிறுவனத்தின் தென்னிந்திய தலைவராக ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா இருப்பது குறிப்பிடத்தக்கது.
பாடல்களை படமாக்க புறப்பட்ட படக்குழு
முதல் முறையாக இப்படத்தில் ரஜினியின் அறிமுகப் பாடலை வெளிநாட்டில் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இப்படத்திலும் ரஜினியின் அறிமுகப் பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியிருக்கிறார்.
இப்பாடலை படமாக்க 'லிங்கா' படக்குழு ஞாயிற்றுக்கிழமை ஹாங்காங் வழியாக மேக்கூ நாட்டிற்கு சென்றிருக்கிறார்கள். மேக்கூ, துபாய், அபுதாபி ஆகிய அரபு நாடுகளில் ரஜினியின் அறிமுகப் பாட்லை படமாக்க இருக்கிறார்கள்.
மொத்த படப்பிடிப்பை முடித்துவிட்டு, ஒரு வாரத்தில் திரும்ப திட்டமிட்டு இருக்கிறது படக்குழு.
ரஜினி பிறந்தநாளில் 'லிங்கா' வெளியீடு
கிராபிக்ஸ் காட்சிகள் அதிமாக இருப்பதால், ரஜினி பிறந்தநாளில் வெளியாவது சந்தேகம்தான் என்று செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், "பொங்கலுக்கு படம் வெளியாகும் என்ற செய்தியில் உண்மையில். திட்டமிட்டப்படி ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12-ஆம் தேதி 'லிங்கா' வெளியாகும்" என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் தளத்திற்கு திரும்புவாரா ரஜினி?
'கோச்சடையான்' திரைப்படம் வெளியாக இருந்த சமயத்தில், ட்விட்டர் தளத்தில் இணைந்தார் ரஜினிகாந்த். அச்சமயத்தில் ரசிகர்களோடு இணைந்திருக்கவே ட்விட்டர் தளத்தில் இணைந்ததாக அறிவித்தார்.
இதுவரை 7 ட்வீட்டுகள் மட்டுமே வெளியிடப்பட்டு இருக்கும் ரஜினியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் இன்னும் சில நாட்களில் 10 லட்சம் ஃபாலோயர்களைக் கடக்க இருக்கிறது.
'கோச்சடையான்' வெளியான மே 22ம் தேதி, "'கோச்சடையான்' படக்குழு, தயாரிப்பாளார், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் அனைவருக்கும் நன்றி" என்று கடைசியாக ட்வீட்டியுள்ளார் ரஜினிகாந்த். அதற்கு பிறகு ட்விட்டர் தளம் பக்கம் வரவே இல்லை.
இந்நிலையில் 'லிங்கா' இசை வெளியீட்டு விழா, பட வெளியீடு என்று சூடு பிடித்திருக்கும் நிலையில் ரஜினி மீண்டும் ட்விட்டர் பக்கம் திரும்புவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.