சசிகலா குடும்பத்தினரைப் பற்றி பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் இயக்குநர் ராம் கோபால் வர்மா.
ரஜினி, சீரஞ்சிவி, பவன் கல்யாண் போன்ற முன்னணி நடிகர்களைப் பற்றி அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிப்பவர் இயக்குநர் ராம் கோபால் வர்மா.
சில நாட்களுக்கு முன்பு 'சசிகலா' என்ற பெயரில் படம் இயக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார். தற்போது சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை உறுதியானதைத் தொடர்ந்து பெங்களூரு சிறையில் உள்ளார் சசிகலா. எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார்.
இந்நிலையில் சசிகலாவைப் பற்றியும், அவருடைய குடும்பத்தினரை பற்றியும் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ராம் கோபால் வர்மா. இது குறித்து, "மன்னார்குடி மாஃபியா கட்டுப்பாட்டில் இருக்கும் பழனிச்சாமி தமிழக முதல்வராக ஆனால், கண்டிப்பாக சிறையிலிருந்து சசிகாலாதான் அரசை நடத்துவார். சக்திவாய்ந்த அம்மாவின் ஆன்மா ஆசிர்வதிக்கவோ, சாபமோ விடாமல் அமைதியாக இருப்பது ஆச்சரியமளிக்கிறது. தமிழகத்தின் மற்ற கடவுள்களும், பக்தர்களும் என்ன செய்து கொண்டிருக்கின்றனர்?
ஜல்லிக்கட்டில் மிருகங்கள் வதைபடுவதை விரும்பும் தமிழக மக்கள், அரசியல் தலைவர்களால் தாங்கள் மிருகங்களை விட மோசமாக நடத்தப்படுவதை உணரவில்லையா? சிறையிலிருந்தே தங்கள் குழுக்களை இயக்கும் குற்றவாளிகள் செய்வது டான் சசிகலா மன்னார்குடி மாஃபியாவின் ஆள் பழனிச்சாமியை வைத்து தமிழ்நாடை கட்டுப்படுத்துவதற்கு முன் ஈடாகாது. வாழ்க தமிழகம், வாழ்க இந்தியா.
சசிகலா படம், சசிகலாவின் பின்புலம் பற்றிய கதையின் கதையாக இருக்கும். மன்னார்குடி மாஃபியா மக்கள் மட்டுமே இதை புரிந்து கொள்ளமுடியும். ஜெயலலிதாவின் ஆன்மா சசிகலாவின் சிறை அறைக்கு வரும் என நான் நிச்சயமாக நினைக்கிறேன். போயஸ் கார்டன் பணியாளர்கள் சொன்னதின் படி, ஜெயலலிதா, சசிகலாவுக்கு இடையே இருந்த உறவுக்குப் பின் இருக்கும் உண்மை, நினைத்துப் பார்க்க முடியாத அளவு அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது. அதை என் படத்தில் காட்டுவேன்.
போயஸ் கார்டனின் தோட்டக்காரர் என்னிடம் சொன்னது என்னவென்றால், பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் பழனிச்சாமியை ஆதரிப்பதன் காரணம், அவர்கள் அனைவரும் சசிகலாவால், மன்னார் குடி மாஃபியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதே" என்று தெரிவித்துள்ளார் ராம்கோபால் வர்மா