தமிழ் சினிமா

சங்கமித்ரா போல சமீபத்தில் என்னை ஈர்த்த கதை எதுவுமில்லை: ஏ.ஆர்.ரஹ்மான்

ஐஏஎன்எஸ்

'சங்கமித்ரா' படக்குழுவின் சார்பில், கான் திரைப்பட விழாவில் பங்கெடுப்பது மகிழ்ச்சியளிக்கிறது என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளனர்.

சுந்தர் சி இயக்கத்தில், ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதி ஹாசன் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில், மூன்று மொழிகளில் தயாராகவுள்ள படம் 'சங்கமித்ரா'. படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

8-வது நூற்றாண்டில் நடக்கும் கற்பனைக் கதையான சங்கமித்ராவின் முதல் பார்வை போஸ்டர்கள், சர்வதேச அளவில் கவனம் பெறும் கான் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டுள்ளது.

முதல் முறையாக இயக்குநர் சுந்தர் சி உடன் இணையும் ஏ.ஆர்.ரஹ்மான், இந்தப் படம் பற்றிக் கூறும்போது, "கான் வருவது இதுதான் முதல் முறை. அற்புதமான மனிதர்களால் சூழப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

6 மாதங்களுக்கு முன் 30 நிமிடங்கள் இந்தப் படத்தின் கதையைக் கேட்டேன். அதுவே நான் ஒப்புக்கொள்ள போதுமானதாக இருந்தது. இயக்குநர் சுந்தர் சி அவர்களுக்கு நல்ல இசைக்கான ரசனை உள்ளது. 'சங்கமித்ரா' போல சமீபத்தில் என்னை ஈர்த்த கதை எதுவுமில்லை. இந்தப் படம் சரியான கலைஞர்களின் கைகளில் உள்ளது" என்றார்.

ஸ்ருதி ஹாசன் பேசுகையில், "கான் சூழல் அற்புதமாக இருக்கிறது. சுற்றிலும் பலரது ஆர்வம் நம்மையும் தொத்திக் கொள்கிறது. எனது நடிப்பின் ஆரம்ப காலகட்டத்திலேயே இந்த இடத்தில் இருப்பதை விசேஷமாகக் கருதுகிறேன்.

இந்தப் படத்துக்காக உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் தயாராகிக் கொண்டிருக்கிறேன். உடலை உறுதியாக வைத்துக் கொள்ள பயிற்சிகள் மேற்கொண்டிருக்கிறேன். இது இயக்குநர் சொல்வதை மட்டும் கேட்டு நடித்துவிட்டுப் போகும் பாத்திரம் அல்ல. இந்த கதாபாத்திரத்துக்கு பல பரிமாணங்கள் உள்ளன. இப்படியான ஒரு வாய்ப்புக்காகத் தான் காத்திருந்தேன்.

சுந்தர் சி, ஒரு இயக்குநராக, ரசிகர்களின் ரசனையை சரியாகப் புரிந்து வைத்திருப்பவர். இப்படியான ஒரு கதை கையில் கிடைக்கும்போது அவர் என்ன மாயம் செய்வார் என நாம் கற்பனை செய்து கொள்ளலாம்" என்று தெரிவித்தார். ஆகஸ்ட் மாதம் சங்கமித்ராவின் படப்பிடிப்பு தொடங்குகிறது

SCROLL FOR NEXT