தமிழ் சினிமா

சாலையை ஆக்கிரமித்து நடிகர் சங்க கட்டிடம்? - ஊழல் தடுப்பு கண்காணிப்பு போலீஸில் மனு

செய்திப்பிரிவு

நடிகர் சங்க கட்டிடம் கட்டப்பட உள்ள இடத்தில் சாலைப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அப் பகுதி குடியிருப்புவாசிகள் சார்பில் ஸ்ரீரங்கன் என்ற வழக்கறிஞர் சென்னை ஊழல் தடுப்பு கண்காணிப்பு போலீஸில் மனு கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக ‘தி இந்து’விடம் அவர் கூறியதாவது:

சென்னை அபிபுல்லா சாலையில் உள்ள நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடம் மொத்தம் 14 கிரவுண்ட்தான். ஆனால், தற்போது அவர்கள் 18 கிரவுண்டு இடத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இதே இடத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அபிபுல்லா சாலையையும், அதற்கு பின்னால் இருக்கும் பிரகாசம் சாலையையும் இணைக்கும் விதமாக 33 அடி அகலம் கொண்ட சாலை இருந்தது. இந்த சாலை சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் சங்கத்தினரின் பயன்பாட்டுக்கு வந்தது.

காலப்போக்கில் நடிகர் சங்க வளாகத்தின் இரண்டு நுழைவாயில் களையும் ஆக்கிரமித்து அதை முழுக்க அவர்கள் உபயோகிக்கும் பகுதியாக பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர்.

இதுகுறித்து இதற்கு முன் இருந்த நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். எந்த பயனும் இல்லை. தற்போது புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்று கட்டிட பணிகளை தொடங்க இருக்கும் நாசர் தலைமையிலான நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். அதற்கு அவர்கள், ‘எங்களிடம் பட்டா இருக்கிறது’ என்றனர்.

மக்கள் பயன்படுத்தி வந்த சாலைப் பகுதிக்கு பட்டா வாங்கியிருப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அதோடு, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் முறையான அனுமதி சான்றிதழ் இல்லாமலேயே புதிய கட்டிடத்தின் பூஜை சமீபத்தில் நடந்துள்ளது.

இவற்றையெல்லாம் சட்டப்படி அணுக வேண்டும் என்ற நோக்கத்தில் உரிய ஆதாரங்களுடன் எங்கள் குடியிருப்புவாசிகள் சார்பில் சென்னை ரிப்பன் கட்டிடத்தில் உள்ள ஊழல் தடுப்பு கண்காணிப்பு போலீஸில் மனு கொடுத்துள்ளோம். தற்போது எங்கள் மனு மீதான விசாரணை தொடங்கியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் சங்கம் விளக்கம்

இதுகுறித்து நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர் பொன்வண்ணன் கூறியதாவது:

இந்த பிரச்சினை இதற்கு முன் இருந்த நிர்வாகத்தினர் இருந்தபோதே எழுந்ததுதான். நாங்கள் பொறுப்பேற்று வந்த பிறகு எந்த ஒரு விஷயத்திலும் தவறான முடிவை எடுத்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம். சட்டரீதியாக அணுகும் இந்த பிரச்சினைக்கு எங்கள் வழக்கறிஞர்தான் பதில் சொல்ல வேண்டும். சுமார் 25 கோடி செலவில் ஒரு கட்டிட விஷயத்தை கையில் எடுக்கும்போது அதில் தவறான எந்த விஷயத்தையும் செய்ய மாட்டோம். அதற்கான உரிமம் கொடுத்த அதிகாரிகளும் தவறாக கொடுத்திருக்க வாய்ப்பு இல்லை. இந்த விஷயத்துக்கு சட்ட ரீதியாக நாங்கள் பதிலளிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT