'2.0' படக்குழு சார்பில் திரையரங்கு உரிமையாளர்களுக்கு 3டி தொழில்நுட்ப விழிப்புணர்வு கருத்தரங்கம் ஒன்றை ஜூலை 5-ம் தேதி ஏற்பாடு செய்துள்ளார்கள்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள '2.0' படத்தின் கிராபிக்ஸ் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன் முதல் பிரதியை சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பார்த்துவிட்டு, பின்னணி இசைக் கோர்ப்பு பணிகளைத் தொடங்குவதற்கு ஆயுத்தமாகி வருகிறார்.
இந்தியாவில் உருவாகியுள்ள முழுமையான முதல் 3டி தொழில்நுட்ப படம் '2.0' ஆகும். 3டி கேமிராவில் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தை திரையிடுவது தொடர்பாக, திரையரங்கு உரிமையாளர்களுக்கு முழுமையான 3டி தொழில்நுட்ப விழிப்புணர்வு கருத்தரங்கம் ஒன்றை '2.0' படக்குழு ஏற்பாடு செய்துள்ளது. சென்னையில் உள்ள ஐ.டி.சி கிராண்ட் சோழா ஹோட்டலில் இக்கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இதில், '2.0' திரையிடலுக்கு என்னவெல்லாம் தேவை, 3டி தொழில்நுட்பத்தின் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை திரையரங்கு உரிமையாளர்களுக்கு எடுத்துரைக்க உள்ளார்கள்.
ஜனவரி 2018-ல் வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கியுள்ளது படக்குழு. அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன், சுதன்ஷு பாண்டே உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்திருக்கிறார். நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ள படத்தை லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார்கள்.
இந்தியா மட்டுமன்றி உலகளவில் தமிழ்ப் படங்களே வெளியாகாத நாடுகளிலும் இப்படத்தை வெளியிட லைக்கா நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.