'கத்தி' மொத்த படப்பிடிப்பும் முடிந்து, தீபாவளிக்கு வெளியாகும் என்பது உறுதியாகி உள்ளது. தெலுங்கு உரிமையை தாகூர் மது வாங்கியிருக்கிறார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா, சதீஷ், நீல் நிதின் முகேஷ் உள்ளிட்டவர்கள் நடித்த படம் 'கத்தி'. லைக்கா நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைத்து இருக்கிறார். தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவித்திருந்தார்கள்.
ஆனால், தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டே இருந்தது. இடையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸூக்கு உடல்நிலை சரியில்லாத போது, உதவி இயக்குநர்கள் விஜய் சம்பந்தப்படாத காட்சிகளை படமாக்கி வந்தார்கள்.
இசை வெளியீடு முடிந்தவுடன், 'செல்ஃபி புள்ள' பாடலை படமாக்க மும்பை சென்றது படக்குழு. இதில் விஜய், சமந்தா மற்றும் வெளிநாட்டு நடன கலைஞர்களை வைத்து மும்பையில் பிரம்மாண்ட அரங்கில் படப்பிடிப்பை நடத்தினார்கள்.
'துப்பாக்கி' படத்தில் இடம்பெற்ற 'கூகுள் கூகுள்' பாடலில் இயக்குநர் முருகதாஸ் மற்றும் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் தோன்றியது போலவே, 'செல்ஃபி புள்ள' பாடலில் முருகதாஸ் மற்றும் அனிருத் தோன்ற இருக்கிறார்கள்.
தற்போது ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து, 'கத்தி' படத்தின் இறுதிகட்டப் பணிகளைத் துரிதப்படுத்தி இருக்கிறார்கள். தீபாவளி அன்று தமிழ் பதிப்பு உடன், தெலுங்கு பதிப்பும் அதே தினத்தில் வெளியாக இருக்கிறது. தெலுங்கு பதிப்பின் உரிமையை தாகூர் பாபு வாங்கியிருக்கிறார்.