தமிழ் சினிமா

நல்ல விஷயங்கள் தோணும் போதே செய்து விட வேண்டும் : விஜய்

ஸ்கிரீனன்

21 ஆண்டு கால திரை வாழ்க்கையில், தொடக்க கட்டத்தில் தன்னை வைத்து படமெடுத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி கூறும் விதமாக தலா ரூ.5 லட்சம் வீதம் 5 தயாரிப்பாளர்களுக்கு, ரூ.25 லட்சம் வழங்கினார் விஜய்.

'வசந்த வாசல்' தயாரிப்பாளர் எம்.ராஜாராம், 'ராஜாவின் பார்வையிலே' தயாரிப்பாளர் எஸ்.செளந்தரபாண்டியன், 'மின்சார கண்ணா' தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி, 'ஒன்ஸ்மோர்' தயாரிப்பாளர் சி.வி.ராஜேந்திரன், 'விஷ்ணு' தயாரிப்பாளர் எம்.பாஸ்கர் ஆகிய ஐந்து பேருக்கு இத்தொகை வழங்கப்பட்டது.

அந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய், "எல்லோரும் உழைப்பைத்தான் சினிமாவில் போடுவார்கள். ஆனால் படத்தின் தயாரிப்பாளர்கள் மட்டும் தான் உழைப்போடு தான் சம்பாதித்த பணத்தையும் போடுகிறார்கள்.

படப்பூஜை போடுவதில் தொடங்கி பட வெளியீடு வரை படக்குழுவினர் அனைவருக்கும் அவர்கள்தான் சாப்பாடு போடுகிறார்கள். ஒரு தாயைப் போல இருந்து அனைவரையும் பத்திரமாக பார்த்துக் கொள்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள், பிரச்னையில் இருப்பதாக அறிந்து வருத்தமடைந்தேன். என் ஆரம்ப கால சினிமா வாழ்க்கையில் என்னை நம்பி படம் எடுத்தவர்களுக்கு இந்நேரத்தில் கை கொடுப்பது கடமை எனத் தோன்றியது.

ஏன் இப்போ செய்கிறார் என பலர் நினைக்கலாம். நல்ல விஷயங்கள் தோணும் போது செய்து விட வேண்டும் என நினைப்பவன் நான். இப்போ தோணுச்சு செஞ்சுட்டேன்.

வெற்றி, இரண்டு மடங்கு நம்பிக்கை தரும். தோல்வி, இரண்டு மடங்கு அனுபவம் தரும். அந்த அனுபவத்தை கொண்டு இவர்கள் மீண்டும் சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்பது எனது ஆசை” என்றார்.

'ஜில்லா' தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி, இயக்குநர் நேசன், இசையமைப்பாளர் நேசன் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். நாளை (டிச. 21) இசை வெளியாக இருந்தாலும், நல்ல காரியம் நடைபெறும் இடத்தில் இசை வெளியீடு நடைபெறுவதே சிறந்தது என்று கூறி படத்தினை இசை வெளியிட்டார்கள்.

'ஜில்லா' படத்தின் இசை விஜய் வெளியிட, விஜய் உதவிய 5 தயாரிப்பாளர்களும் இணைந்து பெற்றுக் கொண்டார்கள்.

SCROLL FOR NEXT