"முதல் படத்தைப் பற்றி முதல் பேட்டி கொடுக்கிறேன். ஏதாவது பிரச்சினை ஆகுற கேள்வியா கேட்றாதீங்க. 'நண்பேன்டா' பொறுத்தவரை நவம்பரில் இசை வெளியீடு, டிசம்பரில் ரிலீஸ் ப்ளான் பண்றோம்" என்று உற்சாகமாக பேச்சைத் தொடங்கினார் இயக்குநர் ஜெகதீஷ்.
இயக்குநர் ராஜேஷிடம் உதவியாளராக இருந்த ஜெகதீஷ் இப்போது உதயநிதி, நயன்தாரா வைத்து 'நண்பேன்டா' படத்தை இயக்கி வருகிறார். அவருடன் உரையாடியதில் இருந்து..
'நண்பேன்டா' முதல் படம், பெரிய பட்ஜெட். படத்தைப் பற்றிச் சொல்லுங்க...
இரண்டு நண்பர்கள். ஒருத்தன் விஞ்ஞானி, மற்றொருவன் மெய்ஞானி. வாழ்க்கையைத் அதோட போக்குல அடுத்துக்கிற ஒருத்தனும், எந்த ஒரு விஷயம் என்றாலும் அதை ஆராய்ச்சிப் பண்ணி, இப்படி பண்ணினா சரியா வருமா என்று ஆலோசித்து பண்ணும் ஒருவனும் நண்பரகளாக இருக்கிறார்கள். அதுக்காக முழுக்க இது காமெடி படம் கிடையாது. ஏ, பி, சி உள்ளிட்ட எல்லா சென்டர்களில் உள்ள மக்களுக்கும் பிடிக்கிற படமாக தான் 'நண்பேன்டா' இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அப்படி என்ஜாய் பண்ணிப் பாக்குற மாதிரி தான் திரைக்கதை பண்ணியிருக்கேன். ஒரு காமெடி படத்துல அடுத்து என்ன அப்படினு பாக்குறவங்க யூகிக்க முடியும். ஆனால், அது 'நண்பேன்டா'வில் முடியாது. அடுத்து என்ன சீன் அப்படினு நீங்கள் யூகிக்க முடியாத அளவிற்கு இருக்கும். 'நண்பேன்டா' ஒரு ரொமான்டிக் காமெடி த்ரில்லர் வகையைச் சார்ந்த படம்.
உங்கள் குருநாதர் இயக்குநர் ராஜேஷிடம் கற்றுக் கொண்டது என்ன?
இப்போ நான் இவ்வளவு பெரிய பட்ஜெட் படம் பண்ணிட்டு இருக்கேன். ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிப்பு, உதயநிதி, நயன்தாரா, சந்தானம், ஹாரிஸ் ஜெயராஜ் இசை, பாலசுப்பிரமணியம் கேமிரா இப்படி பெரிய செட்டப்ல படம் பண்றேன்னா எல்லாத்துக்கு காரணம் ராஜேஷ் சார் தான்.
கதை எப்படி எழுதணும், எப்படி ஒரு காட்சியை முடிவு பண்ணனும், ஷுட்டிங் ஸ்பாட்ல நடிகர்களை எப்படி கையாள வேண்டும் இப்படி சினிமாவைப் பற்றி எல்லாவற்றையும் கத்துக்கிட்டதே ராஜேஷிடம் தான். முக்கியமா, அனைத்து விஷயங்களிலும் எனக்கு ராஜேஷ் சாருடைய அணுகுமுறை ரொம்ப பிடிக்கும்.
ராஜேஷ் பாணியில் உங்களிடம் இருந்து தொடர்ச்சியா காமெடி படங்கள் தான் எதிர்பார்க்கலாம் இல்லயா?
ஒரு இயக்குநரிடம் பணியாற்றினால், அவருடைய பாணியில் தான் என்னுடைய படங்களும் இருக்கும் என்று அவசியமில்லையே. 'நண்பேன்டா' படமே ராஜேஷ் சார் பாணியிலான படம் கிடையாது. ஒரு வித்தியாசமான படமாக தான் இருக்கும்.
முதல் படம் இயக்கி எப்போது வரும் என்று காத்திருக்கும் இயக்குநர்கள் மத்தியில், உங்களுடைய முதல் படம் கண்டிப்பாக வெளியாகும் என்கிற வாய்ப்பு. எப்படி அமைந்தது இந்த வாய்ப்பு?
உண்மையைச் சொன்னால், என்னை மாதிரி எல்லாருக்கும் வாய்ப்பு கிடைக்குமானு தெரியல. முழுக்கதை, திரைக்கதை அப்படினு முழுமையா தயாரான உடனே, உதய் சாரைப் போய் பார்த்து சொன்னேன். அன்றைக்கே இந்தப் படம் பண்ணலாம் என்று முடிவாகி விட்டது. நாலு தடவை ஹீரோவிற்காக கதை மாற்றி, 40 தடவை ஹீரோவோட உட்கார்ந்து எழுதி இப்படி எதுவுமே எனக்கு முதல் படத்தில் நடிக்கல அப்படிங்கிறதில் எனக்கு சந்தோஷம். என்னோட கதை மீது நான் வைச்சிருந்த நம்பிக்கைக்கு மேலே உதய் சார் ரொம்ப நம்பிக்கை வைச்சிருந்தார். அவருக்கு தான் அதற்கு நன்றி சொல்லணும்.
சந்தானம் இப்போ ஹீரோ. அவருக்காக படத்தில் ஏதாவது காட்சிகளை மாற்றி இருக்கீங்களா?
கண்டிப்பா இல்லை. எனக்கு சந்தானத்தை 'சிவா மனசுல சக்தி' படத்துல இருந்து தெரியும். எனக்கு ரொம்ப நெருக்கமான நண்பர்களில் ஒருவர் சந்தானம். நான் அவர்கிட்ட கதையைச் சொன்ன தினத்தில் இருந்தும் சரி, காட்சிப்படுத்தும் போதும் சரி.. நான் இப்போ ஹீரோ, இத மாத்தணும் அப்படினு சொன்னதே இல்லை. ஒவ்வொரு காட்சியிலும் காமெடி நல்ல வரணும் ஜெகதீஷ் அப்படினு சொல்லிட்டு இருப்பார். இந்த படத்தைப் பொறுத்தவரை சந்தானம் காமெடியன் கிடையாது.. இரண்டாவது ஹீரோ.
இப்போ நிறைய காமெடி படங்கள் வெளிவருகிற ட்ரெண்ட். அந்த வரிசையில் உங்கள் பட காமெடி எந்த வகையில் வித்தியாசப்படும்?
முதல்ல 'நண்பேன்டா' காமெடி படம் அப்படினு நினைக்கிறாங்க. இது ஒரு கமர்ஷியல் படம் அதுல காமெடியும் இருக்கும். அவ்வளவு தான். நீங்க படம் பாத்துட்டு சொல்லுங்க, நான் சொன்னது உண்மையா.. இல்லையா என்று.
முதல் பட வாய்ப்பே பெரியது. அடுத்து படங்கள் முடிவு செய்துவிட்டீர்களா?
இரண்டு கம்பெனியில் பேசிட்டு இருக்காங்க. இப்போதைக்கு 'நண்பேன்டா'வில் தான் கவனம். அதற்கு பிறகு தான் மற்றவை எல்லாம்.
கடைசியா ஒரு கேள்வி. உதயநிதி - நயன்தாரா (கேள்வியை முடிப்பதற்குள்)...
இந்த கேள்வியைக் கேட்காமல் பேட்டியை முடிக்க மாட்டீர்கள் என்று எதிர்பார்த்தேன். ஏன் இப்படி எழுதுறாங்கன்னு தெரியல. நயன்தாரா மேடம் எங்க டீமில் இருக்கிற எல்லாருக்குமே நண்பர் தான். மனசுல தோணுவதை எல்லாம் எழுதிக்கிட்டே இருக்காங்க. உண்மையில் மற்றவர்கள் கூட எப்படி நயன்தாரா நட்பா இருக்காங்களோ. அப்படி தான் உதயநிதி கூடயும் நட்பா இருக்காங்க. அது தான் உண்மை.