தமிழ் சினிமா

விருது மேடையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் பரஸ்பரம் பாராட்டு

கா.இசக்கி முத்து

2016-ம் ஆண்டுக்கான சைமா விருதுகள் வழங்கும் விழா சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாளத் திரையுலகில் இருந்து பல்வேறு முன்னணி திரையுலகினர் கலந்து கொண்டனர். அதில் நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் கலந்து கொண்டார்கள்.

நயன்தாரா - விக்னேஷ் சிவன் காதலித்து வந்தாலும், பொது நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டதில்லை. இவ்விருது வழங்கும் நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டு, ஒன்றாக அமர்ந்து ரசித்தார்கள்.

'நானும் ரவுடிதான்' படத்துக்காக சிறந்த இயக்குநருக்கான விருதை வென்றார் இயக்குநர் விக்னேஷ் சிவன். அவ்விருதை பெற்றுக் கொண்டு "நயன்தாரா ஒரு நல்ல மனிதர்.

கதை படிப்பதில் இருந்து காதலில் விழுவது வரை. இப்படத்தின் கதையை நான் சொன்ன போது கொஞ்சம் தயங்கினார். அவரை கதைக்கு ஒப்புக் கொள்ளவைத்து இன்று அவருக்கு அருகிலேயே அமர்ந்திருக்கிறேன்" என்று தெரிவித்தார் விக்னேஷ் சிவன்.

அதனைத் தொடர்ந்து 'நானும் ரவுடிதான்' படத்துக்காக சிறந்த நடிகை விருதை வென்றார் நயன்தாரா. அவ்விருதை வழங்க ஸ்ரீப்ரியா மற்றும் தெலுங்கில் முன்னணி நாயகனாக வலம் வரும் அல்லு அர்ஜூன் ஆகியோர் மேடையேறினார்கள். அப்போது "இப்படத்தின் கதையில் எனக்கு நிறைய சந்தேகங்கள் இருந்தன. இதை நம்மால் பண்ண முடியுமா என்று யோசித்தேன். ஆனால், விக்கி (விக்னேஷ் சிவன்) தான் என் மீது முழு நம்பிக்கை வைத்தார். ஒரு நடிகையாக வித்தியாசமான கதைகள் பண்ணக் கூடிய தருணம் இது என்று நம்பிக்கையூட்டினார். நன்றி விக்கி" என்று பேசினார் நயன்தாரா.

அதனைத் தொடர்ந்து "மேடையில் இருப்பவர்கள் என்னை மன்னிக்க வேண்டும். இந்த விருதை நான் விக்னேஷ் சிவன் கையால் வாங்க விரும்புகிறேன்" என்று தெரிவித்தார் நயன்தாரா. அப்போது ஸ்ரீப்ரியா, அல்லு அர்ஜுன் முன்னியிலை விக்னேஷ் சிவன் 'சிறந்த நடிகை'க்கான விருதை நயன்தாராவுக்கு வழங்கினார்.

SCROLL FOR NEXT