தமிழக அரசியல் மற்றும் மக்களின் தற்போதைய நிலை குறித்து விரக்தியுடன் கருத்து தெரிவித்துள்ள நடிகர் சூர்யா, கலாய்ப்பு தொனியில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவை சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. சட்டப்பேரவைக்குள் தான் தாக்கப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார்.
மேலும், மெரினாவில் உள்ள காந்தி சிலை அருகில் ஸ்டாலின் உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவரோடு கூடிய திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உள்ளிட்ட அனைவரையுமே காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், தமிழக அரசியல் சூழல் மற்றும் மக்களின் நிலை குறித்து முதல் முறையாக ட்வீட் செய்துள்ளார் சூர்யா.
அதில், "இப்போது மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருப்பது நாம் தான் நண்பர்களே..." என்று நையாண்டி தொனியில் விரக்தியாக பதிவிட்டுள்ளார்.
சமூக வலைத்தளத்தில் பலரும் சட்டமன்ற உறுப்பினர்கள் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என கிண்டல் செய்து வந்தார்கள். இதனை முன்வைத்து சூர்யா ட்வீட் செய்திருப்பது கவனிக்கத்தக்கது.