'கடம்பன்' படத்தின் இறுதி சண்டைக்காட்சியை வெளிநாட்டில் காட்சிப்படுத்தியது ஏன் என்று இயக்குநர் ராகவா விளக்கம் அளித்துள்ளார்.
ராகவா இயக்கத்தில் ஆர்யா, கத்ரீன் தெரசா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகவுள்ள படம் 'கடம்பன்'. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை ஆர்யா வெளியிடவுள்ளார். ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் தணிக்கைப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
'கடம்பன்' படத்தின் இறுதி சண்டைக்காட்சிக்காக 70 யானைகளுக்கு இடையே வில்லன்களோடு மோதியுள்ளார் ஆர்யா. இக்காட்சியை ஏன் பாங்காக்கில் காட்சிப்படுத்தினீர்கள் என்று இயக்குநர் ராகவாவிடம் கேட்ட போது, "யானைகள் சம்பந்தப்பட்ட காட்சிகளை கிராபிக்ஸில் செய்தால் தனியாக தெரிந்துவிடும். ஏனென்றால், யானையோடு பேசுவது போன்ற காட்சிகள் எல்லாம் உள்ளது. 70 யானைகள் ஒரே காட்சியில் வரும். தற்போது அனைவருமே கிராபிக்ஸ் காட்சிகள் என்றாலே 'பாகுபலி' படத்தோடு ஒப்பிட ஆரம்பித்துவிடுகிறார்கள். அப்படத்தின் பட்ஜெட் என்பது முற்றிலும் மாறுபட்டது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இங்கேயே படப்பிடிப்பு நடத்தலாம் என்று தான் திட்டமிட்டாலும், ஒரே நேரத்தில் 70 யானைகள் கிடைக்காது. பாங்காக்கில் 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். அதனை இங்கே செய்திருந்தால் 45 நாட்களாகியிருக்கும். தமிழகத்தில் ஒரே நேரத்தில் அவ்வளவு யானைகள் கிடைக்காது.
முதலில் பயந்தோம், யானைகளோடு பழக ஆரம்பித்தவுடன் நட்பாகிவிட்டது. அதனால் தான் 15 நாட்களில் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியை மொத்தமாக படமாக்கி எடுத்து வர முடிந்தது. நாங்கள் படப்பிடிப்பு நடத்தும் போது, ஒரு காட்சி ஓ.கே. என்றால் கைதட்ட வேண்டும். அப்படி தட்டவில்லை என்றால் யானைகள் முதலில் ஆரம்பித்த இடத்துக்கு தானாக சென்றுவிடும்.
யானைகளை வைத்து ஷோ செய்வதால், அந்தளவுக்கு நட்பாக பழகியது. அங்குள்ள யானை பண்ணையில் ஒரே இடத்தில் 400 யானைகள் வரை இருக்கும். அதிலிருந்து தேர்வு செய்து படப்பிடிப்பு நடத்தியுள்ளோம்" என்று தெரிவித்தார் இயக்குநர் ராகவா.