தமிழ் சினிமா

கோவா திரைப்பட விழாவில் திரையிட குற்றம் கடிதல் தேர்வு

ஸ்கிரீனன்

கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட, தமிழில் இருந்து 'குற்றம் கடிதல்' திரைப்படம் தேர்வாகி இருக்கிறது.

வருடம் தோறும் கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில், இந்தியாவில் உருவாக்கப்பட்ட படங்கள் திரையிடுவதுதான் 'இந்தியன் பனோரமா' பிரிவு. இவ்விழாவில் திரையிட கலந்து கொண்ட 181 படங்களில் , 26 படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதில் தேர்வாகி இருக்கும் ஒரே தமிழ்த் திரைப்படம் 'குற்றம் கடிதல்'. இப்படத்தை தயாரித்திருக்கிறது ஜே.எஸ்.கே நிறுவனம். கடந்த வருடம் தேர்வான 'தங்க மீன்கள்' படமும் ஜே.எஸ்.கே நிறுவனம் தயாரித்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தயாரிப்பாளர் சதீஷ்குமாரைத் தொடர்பு கொண்டபோது, "ரொம்ப சந்தோஷமா இருக்கேன். தமிழ் திரையுலகில் இருந்து தேர்வாகி இருக்கும் ஒரே திரைப்படம், அதுவும் நான் தயாரித்திருக்கிறேன் என்ற போது எனது சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

'குற்றம் கடிதல்' படத்தைப் பொறுத்தவரை எனது பெயரைத் தவிர மற்ற பெயர்கள் அனைத்துமே புதுசு. திரைப்பட விழாவில் திரையிடுகிற படம் என்றவுடன், திரைக்கதை ரொம்ப மெதுவாக இருக்கும் என்று நினைக்காதீர்கள். த்ரில்லர் வகை படம் தான் 'குற்றம் கடிதல்'. கடந்த ஆண்டு 'தங்க மீன்கள்', இந்தாண்டு 'குற்றம் கடிதல்' இப்படி எனது தயாரிப்பு படங்கள் தேர்வாவதைப் பார்க்கும் போது தொடர்ச்சியாக நல்ல கதைகளில் கவனம் செலுத்தி வருகிறேன் என்ற நம்பிக்கை பிறக்கிறது"என்றார்.

SCROLL FOR NEXT