தமிழ் சினிமா

விஜய் படத்திற்கு இசை : உற்சாகத்தில் அனிருத்

ஸ்கிரீனன்

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்திற்கு இசையமைக்க இருப்பதை முறைப்படி அறிவித்தார் இசையமைப்பாளர் அனிருத்.

'ஜில்லா' படத்தைத் தொடர்ந்து விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் பணிகளை இன்று முதல் துவங்கியிருக்கிறார்கள்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார் என்று செய்திகள் வெளிவந்தாலும், அதனை அனிருத் அறிவிக்கவில்லை. விஜய் படம் குறித்து கேட்டாலே, முறையாக அறிவிப்பார்கள் என்று பதிலளித்து வந்தார்.

இந்நிலையில் அனிருத் தனது ட்விட்டர் தளத்தில், "விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் இணையும் படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். சந்தோஷமாக இருக்கிறது. பாடல்கள் அருமையாக வந்துள்ளன" என்று கூறியிருக்கிறார்.

இப்படத்தை தயாரிக்கும் ஐங்கரன் நிறுவனம் தங்களது ட்விட்டர் தளத்தில், இன்று முதல் கொல்கத்தாவில் படப்பிடிப்பு தொடங்கி விட்டதாக தெரிவித்து இருக்கிறது.

முதன் முறையாக விஜய் படத்திற்கு இசையமைத்து இருப்பதால் மிகவும் சந்தோஷமாகி இருக்கிறார் அனிருத். இவரது அறிவிப்பைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் #AnirudhRavichanderGonnaRockWithIlayathalapathy என்ற ட்விட்டர் டேக்கை டிரெண்ட் செய்தனர்.

அனிருத் இசையில் 'வேலையில்லா பட்டதாரி', 'மான் கராத்தே' ஆகிய படங்கள் வெளிவர இருக்கின்றன.

SCROLL FOR NEXT