ரூ.100 கோடிக்கும் அதிமான பட்ஜெட்டில் உருவாகும் சரித்தரக் கதை கொண்ட படம் ஒன்றை இயக்க இருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி
சுந்தர்.சி நாயகனாக நடித்து, தயாரித்திருக்கும் 'முத்தின கத்திரிக்கா' திரைப்படம் ஜூன் 17ம் தேதி வெளியாக இருக்கிறது. 'அரண்மனை 2' படத்தைத் தொடர்ந்து தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் 100வது படத்தை இயக்க ஒப்பந்தமானார் சுந்தர்.சி.
இப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் நீண்ட நாட்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. "பெரும் பொருட்செலவில் 'மஹாதீரா' பாணியில் உருவாக இருக்கிறது.
சுந்தர்.சி இயக்கத்தில் உருவான படங்களில் அதிகமான பொருட்செலவு இப்படத்துக்காகத் தான் இருக்கும். ரூ.100 கோடிக்கும் அதிகமான பொருட்செலவில் இப்படம் தயாராக இருக்கிறது. இந்தி திரையுலகின் முன்னணி நாயகியிடம் நாயகி வேடத்துக்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்" என்று படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.
இப்படத்தின் நாயகன் யார் என்பது வரும் வாரத்தில் முடிவு செய்யப்படும் என தெரிகிறது. 'நான் ஈ', 'மஹாதீரா’ தற்போது 'பாகுபலி 2' படங்களுக்கு கிராபிக்ஸ் காட்சிகளுக்கு பணியாற்றிய கமலக்கண்ணன் இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு பணியாற்ற இருக்கிறார்.
"கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக இருப்பதால் கமலக்கண்ணனை ஒப்பந்தம் செய்திருக்கிறோம். இப்படத்திற்கான பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு செல்ல திட்டமிட்டு இருக்கிறோம்" என்றும் படக்குழு தெரிவித்தது.
மேலும், இப்படத்தின் கலை இயக்குநராக சாபு சிரிலிடமும், ஒளிப்பதிவாளராக திருவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது. விரைவில் ஒப்பந்தம் செய்யப்படுவார்கள் என தெரிகிறது.