சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் படத்துக்கு 'மாவீரன் கிட்டு' என தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடிக்க சுசீந்திரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்று தொடங்கப்பட்டது. ஆனால், நடிகர்களின் தேதிகள் பிரச்சினை காரணமாக அப்படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
அப்படம் ஆரம்பிக்கும் முன்பு விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படத்தை இயக்க இருக்கிறார் சுசீந்திரன். இப்படத்தில் விஷ்ணு விஷால் உடன் ஸ்ரீதிவ்யா, பார்த்திபன், சூரி ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள். இப்படத்துக்கு காசி விஸ்வநாதன் எடிட்டிங் பணிகளை கவனிக்க இருக்கிறார். வசனம் மற்றும் பாடல்களை யுகபாரதி எழுத இருக்கிறார். 45 நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
இப்படத்துக்கு 'மாவீரன் கிட்டு' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள். விஷ்ணு விஷால் இப்படத்தின் தலைப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
இப்படம் குறித்து இயக்குநர் சுசீந்திரன் "இது ஈழ விடுதலை பற்றிய திரைப்படம் அல்ல. 1985 காலகட்டத்தில் நம் தமிழகத்தில் மக்களின் உரிமைக்காக போராடிய ஒரு வீரனைப் பற்றிய திரைப்படம் தான் இது" என்று தெரிவித்திருக்கிறார்.