தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என அனைத்து தரப்புக்கும் லாபகரமாக அமைந்தது 'துருவங்கள் 16'
கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரகுமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'துருவங்கள் 16'. கடந்தாண்டின் இறுதிப்படமாக இப்படம் வெளியானது. விமர்சன ரீதியாக இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. புதுமையான திரைக்கதை, எடிட்டிங் என பல்வேறு விஷயங்களுக்கு விமர்சகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.
இயக்குநர் ஷங்கர், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல்வேறு திரையுலகினர் தங்களுடைய சமூக வலைத்தளத்திலும், நேரிலும் படக்குழுவினருக்கு தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
இந்நிலையில், 2016ம் ஆண்டில் இறுதியாக வெளியான லாபகரமான படம் என்று விநியோகஸ்தர்கள் தெரிவித்தார்கள். இது குறித்து விநியோகஸ்தர்களிடம் கேட்ட போது, "குறைந்த நாட்களில் சிறப்பாக திட்டமிட்டு தயாரித்தார்கள். குறைவான திரையரங்களில் சரியாக திட்டமிட்டும் விநியோகம் செய்யப்பட்டது.
பொங்கல் வெளியீடு வரை எந்த ஒரு படம் போட்டிக்கும் இல்லாததால் நல்ல வசூல் செய்தது. விமர்சகர்கள் மற்றும் திரையுலகினரின் பாராட்டு இப்படத்தின் வசூலுக்கு கை கொடுத்தது. பொங்கல் அன்று கூட இப்படத்துக்கு சுமார் 80% கூட்டம் இருந்தது.
2016ம் ஆண்டில் வெளியான படங்களில் 'துருவங்கள் 16' தான் இறுதியாக அனைத்து தரப்புக்கும் லாபகரமாக அமைந்த படம்" என்று தெரிவித்தார்கள்.