ஜல்லிக்கட்டு விவகாரத்தில் இளைஞர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஜனவரி 20-ம் தேதி மவுனப் போராட்டத்தை அறிவித்துள்ளது நடிகர் சங்கம்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் பல்வேறு ஊர்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இளைஞர்கள் பலரும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு வருகிறார்கள்.
இளைஞர்கள் ஒன்றுகூடி நடத்தப்பட்டு வரும் இப்போராட்டத்துக்கு திரையுலகினர் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இப்போராட்டத்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் தங்களுடைய ஆதரவைத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் துணைத் தலைவர் பொன்வண்ணன் பேசியது, "ஜனவரி 20-ம் தேதி நடிகர் சங்கத்தின் சார்பாக மாபெரும் மவுனப் போராட்டம் நடத்தவுள்ளோம். இதில் அனைத்து நடிகர், நடிகைகளும் கலந்து கொள்ள அறிவுறுத்துவோம்.
தயாரிப்பாளர் சங்கம், பெப்சி உள்ளிட்ட அனைத்து சங்கங்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பி இன உணர்வுப் போராட்டமாக நடைபெறும். மாணவர்களின் போராட்டத்தை முன்னுறுத்தி, நாங்கள் பின்னிருந்து ஆதரவு தருவோம். அன்றைய தினம் படப்பிடிப்பை ரத்து செய்ய தயாரிப்பாளர் சங்கத்துக்கு கடிதம் அனுப்பவுள்ளோம்.
இப்போராட்டத்தை நடிகர்களின் போராட்டமாக முன்னுறுத்துவதில் எங்களுக்கு உடன்பாடில்லை. இந்த மாணவர்களின் போராட்டம் ஜல்லிக்கட்டுக்காக ஒன்றிணைந்திருக்கிறது. இப்போராட்டம் இன்னும் பல நிலைகளில் வலுப்பெற வேண்டும். நடிகர்கள் முன்னின்று மாணவர்களின் போராட்டத்தை மழுங்கடிக்க விரும்பவில்லை. அவர்களுடைய போராட்டத்துக்கு முன்னின்று, நாங்கள் பின் நின்று அவர்களுடைய போராட்டத்தைக் கொண்டு போய் சேர்ப்போம்.
அனைத்து நடிகர்களும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என வேண்டுகோள் வைப்போம்" என்று தெரிவித்தார்.