தமிழ் சினிமா

இறைவி சர்ச்சை: செயற்குழுவில் தயாரிப்பாளர்கள் காட்டம்

ஸ்கிரீனன்

'இறைவி' படத்தில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களை தவறாக சித்தரித்ததாக, தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழுவில் காட்டமாக விவாதிக்கப்பட்டது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'இறைவி'. சி.வி.குமார், அபினேஷ் இளங்கோவன் மற்றும் ஞானவேல்ராஜா ஆகியோர் இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

ஒரு தயாரிப்பாளருடான ஈகோ யுத்தத்தின் விளைவாக முடக்கப்படும் ஒரு திரைப்படத்தின் இயக்குநரை முக்கிய கதாபாத்திரமாகக் கொண்டு, அதையொட்டி நகரும் வகையில் இறைவி கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் காட்டப்பட்ட தயாரிப்பாளர் கதாபாத்திரம் மிக மோசமாக சித்தரிக்கப்பட்டதாகவும், ஒட்டுமொத்த தமிழ் சினிமா தயாரிப்பாளர்களையும் அவமதிக்கும் வகையில் பல காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் பல தயாரிப்பாளர்கள் படம் வெளியான அன்று தங்களது எதிர்ப்பை பதிவு செய்தார்கள்.

இதனால் ஜூன் 4ம் தேதி மாலை சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி ஸ்டூடியோவில் 'இறைவி' படத்தின் காட்சி தயாரிப்பாளர் சங்கத்திற்காக திரையிடப்பட்டது. இதில் சுமார் 100 தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டு பார்த்திருக்கிறார்கள். தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து கார்த்திக் சுப்பராஜூக்கு ரெட் போட்டாக வேண்டும் என்ற குரல் மேலோங்கி இருக்கிறது.

செயற்குழுவில் தயாரிப்பாளர்கள் காட்டம்

'இறைவி' படத்துக்கு தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து எதிர்ப்புகள் வலுக்கவே தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நேற்று (ஜூன் 6) மாலை நடைபெற்றது.

அதில் பல தயாரிப்பாளர்கள் கார்த்திக் சுப்பராஜூக்கு 'ரெட்' போட வேண்டும் என்று குரல் எழுப்பி இருக்கிறார்கள். மேலும் சிலர் இப்படத்தின் கதையை ஞானவேல்ராஜா மற்றும் சி.வி.குமார் இருவருமே முழுமையாக தெரியாமல் தயாரித்திருக்க மாட்டார்கள். ஆகவே, அவர்களையும் அழைத்து விசாரிக்க வேண்டும் என்றும் சிலர் தெரிவித்திருக்கிறார்கள்.

செயற்குழு கூட்டத்தின் இறுதியாக, இயக்குநர் சங்கத்திற்கு புகார் தெரிவித்து அவர்களை கார்த்திக் சுப்பராஜை அழைத்து விசாரிக்க சொல்ல வேண்டும் என்று முடிவு எடுத்திருக்கிறார்கள். அந்த முடிவு வரும் வரை கார்த்திக் சுப்பராஜூக்கு யாரும் ஒத்துழைக்க வேண்டாம் என்று திட்டமிட்டு இருக்கிறார்கள். தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து எந்த ஒரு படத்துக்கோ, இயக்குநருக்கோ ரெட் போட முடியாது என்று சொல்லப்படுகிறது.

ஏன் ரெட் போட முடியாது?

'விஸ்வரூபம்' படத்துக்கு ரெட் போடப்பட்ட போது, டெல்லியில் உள்ள CCI -ல்(Compatision Commission of India) புகார் அளித்தார்கள். அப்போது அவர்கள் விசாரித்து, படத்துக்கு தடை குறித்து பேசியவர்கள் அனைவரையும் அழைத்து விசாரித்தார்கள். அந்த சர்ச்சை இன்னும் முடிவடையாத சூழலில் மீண்டும் ரெட் போட்டு பிரச்சினையில் மாட்டிக் கொள்ள வேண்டாம் என்று திட்டமிட்டு இருக்கிறார்கள்.

என்ன சொல்கிறார் கார்த்திக் சுப்பராஜ்?

கார்த்திக் சுப்பராஜ் தரப்பில் விசாரித்த போது, "இதுவரை புகார் உள்ளிட்ட எந்த ஒரு விஷயம் தொடர்பாகவும் அவருக்கு வரவில்லை. அவ்வாறு வந்தவுடன் மட்டுமே அவர் பேசுவார்" என்று தெரிவித்தார்கள்.

SCROLL FOR NEXT