நிச்சயம் இன்னும் நிறைய தேசிய விருதுகள் வாங்கியிருப்பார் என நா.முத்துக்குமார் மறைவு குறித்து இயக்குநர் ராஜேஷ் குறிப்பிட்டார்.
மஞ்சள் காமாலையால் அவதிப்பட்டு வந்த தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் சென்னையில் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 41.
இயக்குநர் ராஜேஷ் இயக்கிய அனைத்து படங்களிலும், அனைத்து பாடல்களையும் எழுதியவர் நா.முத்த்துக்குமார். இருவரும் நெருங்கிய நண்பர்களாவர்.
நா.முத்துக்குமாரின் மறைவு குறித்து இயக்குநர் ராஜேஷிடம் பேசிய போது, "எனக்கு மட்டுமல்ல, அவரோடு பணியாற்றிய அனைத்து இயக்குநர்களுக்குமே மிகப்பெரிய இழப்பு. தூங்குவது போலவும், சாப்பிடுவது போலவும் கவிதை எழுதுவது நா.முத்துக்குமாருக்கு இயல்பான ஒன்று என பாலுமகேந்திரா சார் ஒரு முறை சொன்னார். அதை நான் உணர்வுபூர்வமாக அனுபவித்திருக்கிறேன்.
அரைமணி நேரத்தில் ரொம்ப உணர்வுபூர்வமாக நிறைய பாடல்களை எழுதியிருக்கிறார். 'சிவா மனசுல சக்தி' படத்தில் வரும் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' பாடல் அரை மணி நேரத்தில் யுவன் சார் ஸ்டூடியோவில் வைத்து எழுதியது. எத்தனை முறை வேறு மாதிரி எழுதிக் கொடுங்கள் என்று கேட்டாலும் எழுதிக் கொடுப்பார். அவரோடு அப்படி பணியாற்றியே பழகிவிட்டோம், தற்போது என்ன செய்யப் போகிறோம் என தெரியவில்லை. மிகப்பெரிய இழப்பு.
பாடல்கள் எல்லாம் எழுதி முடித்தவுடன், அவருடைய இலக்கிய புத்தகங்கள் எல்லாம் எனக்கு கொடுப்பார். அவர் மிகப்பெரிய பொக்கிஷம். அவருடைய இலக்கியம் வேறு ஒரு உலகம். அங்கு வேறு ஒரு மனிதராக வாழ்ந்து வந்திருக்கிறார். அவர் கொடுத்த அனைத்து புத்தகங்களையும் என்னால் இன்னும் படித்து முடிக்க முடியவில்லை. அவர் எப்போது எழுதினார் என்று தெரியவில்லை.
இரவு 1 மணிக்கு விழித்திருந்தால், இந்த வரியை மட்டும் சரி பண்ணலாமே என்று அழைப்பேன். அப்போதும் தூங்காமல் விழித்திருப்பார். போனில் உடனடியாக சரி செய்து கொடுப்பார். 2 தேசியவிருதுகள் வாங்கியிருக்கிறார். நிச்சயம் இன்னும் நிறைய தேசிய விருதுகள் வாங்கியிருப்பார். சில நாட்களுக்கு முன்பு கூட இந்தாண்டும் எனக்கு தேசிய விருது கிடைக்கும், ஒரு படத்தில் பாடல்கள் எல்லாம் அவ்வளவு அற்புதமாக வந்திருக்கிறது என்றார்.
அவருடைய குடும்பத்தினர் அனைவருமே எனக்கு தெரியும். அவரைப் பிரிந்து வாடும் அந்த குடும்பத்தினர் தான் தற்போது என் கண்முன் நிற்கிறார்கள். குடும்பத்தோடு அவ்வளவு நெருக்கமாக இருந்தார். பாடலாசிரியர் என்பதையும் தாண்டி எனக்கு நல்ல நண்பராக இருந்தார். அவருடைய தமிழ் வரிகளையும் அவரையும் பிரிந்து ரொம்ப வருந்துகிறோம்" என்று மிகவும் வருத்தத்துடன் குறிப்பிட்டார் இயக்குநர் ராஜேஷ்.