'காலா' படத்தலைப்பின் பின்னணி என்ன என்பது குறித்து இயக்குநர் ரஞ்சித் விளக்கமளித்துள்ளார்.
'2.0' படத்தைத் தொடர்ந்து மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்துக்கு 'காலா' என பெயரிட்டுள்ளார்கள். மே 28-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
ஹியூமா குரேஷி, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். படத்தின் எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத், ஒளிப்பதிவாளராக முரளி, சண்டைப் பயிற்சியாளராக திலீப் சுப்பராயன் ஆகியோர் பணிபுரியவுள்ளார்கள்.
'காலா' படத்தின் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய போஸ்டர்களை தயாரிப்பாளர் தனுஷ் வெளியிட்டுள்ளார். இதனால் மூன்று மொழிகளிலும் இப்படம் வெளியாகவுள்ளது உறுதியாகி இருக்கிறது.
இப்படம் குறித்து இயக்குநர் ரஞ்சித், " 'காலா' என்றால் காலன், எமன் என்று சொல்லலாம். 'கரிகாலன்' என்ற பெயரின் பெயர்ச்சொல் தான் 'காலா'. 'கரிகாலன்' என்ற தலைப்பின் சுருக்கமே 'காலா'.
மும்பையில் 28-ம் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது. படத்தில் வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதை இன்றே விரைவில் அறிவிக்கவுள்ளோம். படத்தின் வேலைகளை மும்முரமாக தொடங்கியுள்ளோம். முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையிலும், அதனைத் தொடர்ந்து சென்னையிலும் படப்பிடிப்பு நடைபெறும்.
இது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த கதையாக இருக்கும். கதையின் அடிப்படை குறித்து பின்னர் சொல்கிறேன். 'கரிகாலன்' என்ற பெயர் ரஜினிக்கு மிகவும் பிடித்த பெயர். படத்தலைப்பு 'காலா' என்றவுடன் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.
பட வெளியீடு குறித்து இன்னும் எதுவும் முடிவாகவில்லை. ரசிகர்களை திருப்திப்படுத்தும் படமாக ஆக்ஷன் காட்சிகளோடு 'காலா' இருக்கும். இப்படத்தின் பெயரிலேயே படத்தின் சக்தி என்னவென்று தெரியும். நிச்சயமாக நல்ல திரைப்படமாக கொடுக்க முயற்சி செய்வோம்" என்று தெரிவித்துள்ளார்.