எல்லை பாதுகாப்பு அதிகாரியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் விக்ரம்பிரபு.
கிஷோர் - சினேகா நடிக்க, ஜி.என்.ஆர். குமாரவேலன் இயக்கத்தில் வெளியானது 'ஹரிதாஸ்'. விமர்சகர்கள் மத்தியில் இப்படம் கவனம் ஈர்த்தது. அப்படத்தினைத் தொடர்ந்து அவரது அடுத்த படம் என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்நிலையில் தனது அடுத்த படத்தினை அறிவித்திருக்கிறார் ஜி.என்.ஆர்.குமாரவேலன். அப்படத்தினை தயாரிக்க இருக்கிறது 'தலைவா' படத்தினைத் தயாரித்த மிஸ்ரி புரொடக்ஷன்ஸ்.
இப்படத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அவருடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.
இப்படம் குறித்து ஜி.என்.ஆர்.குமாரவேலன், “ எல்லை பாதுகாப்புப் படையில் பணியாற்றும் இளைஞனின் காதல் தான் இந்த படத்தின் கரு. இமயமலை காடுகள் மற்றும் இந்திய எல்லைப் பகுதிகளில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளோம். எல்லை பாதுகாப்புப் படையில் உள்ள நுணுக்கமான விஷயங்கள் குறித்து ராணுவ அதிகாரிகளிடம் பேசி வருகிறேன்.
இப்படத்திற்காக விக்ரம் பிரபுவின் கெட்டப்பை மாற்ற உள்ளோம். ஹீரோயின் உள்பட தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.” என்று தெரிவித்திருக்கிறார்.