நெடுஞ்சாலையில் ஓடும் வாகனங் களில் தொடரும் திருட்டு, அருகில் ஒரு காவல் நிலையம், அதன் அருகே ஒரு டெல்லி தாபா உணவகம் இந்தப் பின்னணியைக் கொண்டு ஒரு திரைப் பயணத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணா.
தாய், தந்தை இறந்துவிடும் ஒரு கார் விபத்து தருணத்தில் பிறக்கிறான் நாயகன் தார்ப்பாய் முருகன் (ஆரி). ஒரு வியாபாரியால் எடுத்து வளர்க்கப்படும் முருகன் நெடுஞ்சாலையில் வாகனங்களில் திருடும் தொழிலில் கைதேர்ந்தவனாக ஆகிறான். குற்றவாளிகளைக் காவல் துறை கை வைக்காதபடி பார்த்துக் கொள்கிறான் நாட்டு சேகர் (சலீம் குமார்).
மங்கா (ஷிவதா) நெடுஞ்சாலையில் உணவகம் நடத்துகிறார். முருகனுக்கும் மங்காவிற்கும் இடையே முட்டலும் மோதலுமாகவே இருக்கிறது.
இந்தச் சூழலில் அந்த ஊர் காவல் நிலையத்திற்கு மாசானமுத்து (பிரசாந்த் நாராயணன்) இன்ஸ்பெக்டராக வருகிறான். மங்காவின் அழகில் மாசானமுத்து மயங்குகிறான். ஒருநாள் எல்லை மீறி தவறாக நடக்க முயலும்போது அவனைத் தாக்கிவிடுகிறாள். மாசானமுத்து மங்காவைப் பழிவாங்கத் துடிக்கிறான். அவனது சூழ்ச்சியிலிருந்து தன்னைக் காப்பாற்றும் முருகன் மீது அவளுக்குக் காதல் வருகிறது.
ஆனால் முருகன் மங்காவைக் காதலிக்கவில்லை. ஒரு கட்டத்தில் மங்கா தனது மானத்தைவிட்டு முருகனின் உயிரைக் காப்பாற்றுகிறாள். இதன் பின்னர் முருகனுக்கும் காதல் வந்துவிடுகிறது. மாசானமுத்து கொந்தளிக்கிறான். முருகனைக் கொன்று மங்காவை அடையத் துடிக்கிறான். முருகனைச் சிக்கவைக்க வலை விரிக்கிறான். அவன் முயற்சி வென்றதா என்பதே மீதிக் கதை.
நெடுஞ்சாலை சார்ந்த வாழ்வு என்பது வித்தியாசமான கதைக்களம்தான். திருட்டுக் காட்சிகளை நம்பகத்தன்மையோடு காட்ட இயக்குநர் கிருஷ்ணா மெனக் கெட்டிருக்கிறார்.
முறுக்கேற்றிய உடம்பு, அலட்சியமான பார்வை, அழுக்கு தாடி என்று திரியும் நாயகனின் பாத்திரம் ‘பருத்தி வீரன்’ கார்த்தியையும் அதுபோன்ற வேறு சில பாத்திரங்களையும் நினைவுபடுத்துகிறது. திரைக்கதையில் அழுத்தமான காட்சிகள் இல்லை. முருகன் வெளியே சென்றால் அவன் உயிருக்கு ஆபத்து என்பதால் அவனைத் தடுத்து நிறுத்துவதற்காகத் தன் மானத்தை மங்கா பணயம் வைப்பது அழுத்தமாக அமைந்திருக்க வேண்டிய காட்சி. ஆனால் மேம்போக்காக அமைந் துள்ளது. காதல், சோகம், துரோகம் போன்ற உணர்வுகள் ஆழமாக வேரூன்றாமல் அவசரத்துக்கு நட்டுவைத்த மரம் போல் செயற்கையாக இருக்கின்றன.
கோர்ட்டில் முருகன் மங்காவைக் காப் பாற்றும் காட்சி ரசிக்கவைக்கிறது. ஆனால் அந்த இடத்தில் நாயகிக்கு, முருகன் மீது காதல் பூத்து பாடல் ஒலிப்பது சலிப்பு.
இடைவேளை வரை ஓரளவு விறுவிறு வென சென்ற திரைக்கதை அதன் பின் ஊர்கிறது.
ஆரியின் நடிப்பில் பக்குவம் தெரிகிறது. கூர்மையான பார்வையும் முரட்டுத்தனமான உடல் மொழியுமாக மிரட்டுகிறார். ஆனால் ஒரே விதமான முகபாவங்களுடன் வருவது அலுப்பூட்டுகிறது. சலீம் குமார் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பிரசாந்த் நாராயணன் நடிப்பு அருமை. நாயகி ஷிவாதா உற்சாகமான அப்பாவிப் பெண் பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்துகிறார். தம்பி ராமையாவின் நையாண்டி காமெடி ரசிக்க வைக்கிறது.
வறட்சியையும், இரவு நேர நெடுஞ்சாலையையும் அழகாகப் படம் பிடித்திருக்கிறார், ராஜவேல். கதையோடு பயணிக்க வைக்கும் ஒளிப்பதிவு. அதிகாலையின் ரம்மியமும் இருளின் மவுனமும் நெடுஞ்சாலையின் பரபரப்பும் என அழகை அள்ளித்தருகிறார். பின்னணி இசை, பாடல்களில் தனிக் கவனம் செலுத்திய சத்யாவையும் பாராட்டலாம்.
நெடுஞ்சாலைத் திருட்டைச் சாதுர்யமாக காட்சிப்படுத்திய இயக்குநர், காதல், மனமாற்றம் போன்றவற்றிலும் கவனம் செலுத்தியிருந்தால் படம் சிறப்பாக அமைந்திருக்கும்.