'ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' படத்திற்காக இமான் இசையில் பாடல் ஒன்றைப் பாடியிருக்கிறார் நடிகர் விமல்.
'ஜெயம் கொண்டான்', 'கண்டேன் காதலை', 'சேட்டை' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கண்ணன். 'சேட்டை' படத்தினைத் தொடர்ந்து தற்போது 'ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' படத்தினை இயக்கி வருகிறார்.
விமல், சூரி, ப்ரியா ஆனந்த் ஆகியோர் நடித்து வருகிறார்கள். மைக்கேல் ராயப்பன் தயாரித்து வருகிறார். சமீபத்தில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
எப்போதுமே தான் இசையமைக்கும் படங்களில் புதுமையை புகுத்தும் இமான், இப்படத்தின் ஒரு பாடலுக்கு நாயகன் விமலை பாட வைத்திருக்கிறார். 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்திற்காக சிவகார்த்திகேயனை ஒரு பாடல் பாட வைத்திருந்தார். அது போலவே, இப்படத்தில் நாயகன் விமலை பாட வைத்திருக்கிறார்.
ரெண்டு ராஜாவில் முதல் ராஜா விமல், ரெண்டாவது ராஜா சூரி. தூத்துக்குடியிலிருந்து சென்னை வரும் ரயிலில் விமல், சூரி, ப்ரியா ஆனந்த் மூவரும் சந்திக்கிறார்கள். அப்போது நடைபெறும் ஒரு சம்பவம், எப்படி மூவரும் வாழ்க்கையை மாற்றுகிறது என்பது தான் கதை. கதை ரயில் தண்டவாளத்திலிருந்து தொடங்கி கார் பயணம், துரத்தல், காதல், கலகலப்பு, விறுவிறுப்பு என ஒட்டம் பிடிக்குமாம்.
"என் படங்களில் அரிவாளால் வெட்டுகிற ஆளையோ, பெண்ணிடம் வன்முறை செய்யும் வில்லன்களைப் பார்க்க முடியாது. ராமாயணம், மகாபாரத்தில் இவர் தான் வில்லன் என்று யாரையும் சொல்ல முடியாது என்பது என் கருத்து. இப்படத்தில் அப்படியோரு பாத்திரம் நாசருக்கு. தொழிலதிபரான இவர், சுயநலவாதியாக இருப்பார். அது வில்லத்தனம் மாதிரி தெரியுமே தவிர வில்லன்னு சொல்ல முடியாது. இக்கதைக்காக சுமார் ஒன்றரை வருடங்கள் எடுத்துக் கொண்டேன்" என்று கூறினார் இயக்குநர் கண்ணன்.