'நாணயம்', 'நீதானே என் பொன்வசந்தம்', 'வாகை சூட வா' உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஒம் பிரகாஷ் தான் 'ஆரம்பம்' படத்திற்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
'ஆரம்பம்' படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து முதன் முறையாக பேசியிருக்கிறார் ஒம் பிரகாஷ்.
“அஜித் எப்போதுமே என்னை ஊக்குவித்துக் கொண்டே இருப்பார். இப்படத்தில் பணியாற்ற எனக்கு அது பெரிதும் உதவியாக இருந்தது. இப்படத்தில் அஜித்திற்கு விபத்து ஏற்படும் காட்சியினைப் பற்றி சொல்லியாக வேண்டும்.
அக்காட்சியைப் படமாக்கும் போது கார் சுமார் 100 கி.மீ வேகத்தில் சென்றுக் கொண்டிருந்தது. 7 நிமிடங்கள் வரை அக்காட்சியை படமாக்கினோம். அஜித் சாரின் கால் முட்டி காரின் பானெட்டில் இடித்துக் கொண்டே இருந்தது. நான் அஜித்தின் முகபாவனைகளை படமாக்கி கொண்டிருந்தேன்.
தனது காலில் அடிபட்டு விட்டது என்பதை இயக்குநர் ஷாட் ஒ.கே என்று சொல்லும் வரை முகபாவனைகளில் கூட காட்டவில்லை. ஷாட் ஒ.கே என்று விஷ்ணுவர்தன் சொன்னவுடன் தான் அவருக்கு அடிப்பட்டு இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.
படக்குழுவினரிடம் அவர் 'அதெல்லாம் ஒண்ணுமில்லை' என்று சமாதானப்படுத்தினாரே தவிர அவருடைய வலியைக் காட்டவில்லை. அடுத்த நாள் படப்பிடிப்பிற்கு கூட முதல் ஆளாக வந்து, டூப் போடாமல் அக்காட்சியில் நடித்து முடித்தார்.
அஜித்தின் இந்த பண்பும், வேலை மீது அவர் கொண்டுள்ள அக்கறையும் தான் அவரை இவ்வளவு பெரிய உயரத்திற்கு கொண்டு வந்திருக்கிறது” என்று கூறியுள்ளார் ஒம் பிரகாஷ்.