தமிழ் சினிமா

தாமிரா - சமுத்திரக்கனி இணையும் ஆண் தேவதை

ஸ்கிரீனன்

தாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கவிருக்கும் புதிய படத்துக்கு 'ஆண் தேவதை' என பெயரிட்டு இருக்கிறார்கள்.

'ரெட்டச்சுழி' படத்தில் பாலசந்தர் - பாரதிராஜா இருவரையும் ஒன்றாக நடிக்க வைத்தவர் இயக்குநர் தாமிரா. அதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

இப்படத்தில் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன், கவின், கஸ்தூரி உள்ளிட்ட பலர் நடிக்கவிருக்கிறார். 'ஆண்தேவதை' என பெயரிடப்பட்டு இருக்கும் இப்படம் முழுக்க சென்னையில் பின்னணியில் படமாக்கப்பட இருக்கிறது.

இப்படிப்பட்ட இன்றைய பரபரப்பான சூழலில் குழந்தை வளர்ப்பு, கணவன் மனைவி உறவு போன்றவை எந்த அளவுக்கு சிக்கலை எதிர்கொள்கின்றன. ஒரு தாயிடம் வளரும் குழந்தைக்கும் தந்தையிடம் வளரும் குழந்தைக்கும் என்ன வேறுபாடு?. இன்று நிலவும் பொருளாதார சூழலும், கடன் வாங்கும் மனப்பான்மையும் மனிதர்களை எந்த எல்லைக்கு அழைத்துச் செல்கிறது என்பதை இப்படத்தில் பேசவிருக்கிறார்கள்.

மறைந்த பாலசந்தரின் மீது கொண்ட மதிப்பின் அடையாளமாக 'சிகரம் சினிமாஸ்' என்ற நிறுவனம் தொடங்கி இப்படத்தை ஃபக்ருதீனுடன் இணைந்து தயாரிக்கவிருக்கிறார் தாமிரா. மேலும், இப்படத்தை தன் குருநாதர் பாலசந்தருக்கு சமர்ப்பணம் செய்யவும் உள்ளார்.

ஜிப்ரான் இசையமைக்க இருக்கும் இப்படத்துக்கு விஜய்மில்டன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது.

SCROLL FOR NEXT