ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக இளைஞர்களின் நடத்திவரும் போராட்டத்துக்கும் ஜெயம் ரவி தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் பல்வேறு ஊர்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இளைஞர்கள் பலரும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு வருகிறார்கள்.
இளைஞர்கள் ஒன்றுக்கூடி நடத்தப்பட்டு வரும் இப்போராட்டத்துக்கு திரையுலகினர் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இப்போராட்டம் தொடர்பாக ஜெயம் ரவியிடம் பேசிய போது, "என் உடன் பிறப்புகளான தமிழர்களுக்கு, தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டு நடக்காதது எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது.
நான் வெளி ஊரில் படப்பிடிப்பில் இருக்கின்றேன். நீங்கள் நடத்தும் போராட்டத்தில் நான் இல்லையே என்று என் மனம் வேதனையளிக்கிறது. போராட்டத்தில் போராடுகின்ற மாணவ, மாணவிகளுக்கும், இளைஞர்களுக்கும் என் முழு ஆதரவு எப்போதும் உண்டு" என்று ஜெயம் ரவி தெரிவித்தார்.