ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக ஒட்டுமொத்த போலீஸையும் குறை கூறக்கூடாது என சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சி 3'. பல சமயங்களில் தள்ளிவைக்கப்பட்டு இறுதியாக பிப்ரவரி 9ம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நாயகிகள் தவிர்த்து ஒட்டுமொத்த படக்குழுவும் கலந்து கொண்டார்கள். இச்சந்திப்பில் சூர்யா பேசியது, "சினிமாவுக்கு வந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டது, 35 படங்களில் நடித்துவிட்டேன். 'நேருக்கு நேர்' படத்தில் நடிக்கும் போது, எனக்காக துரைசிங்கம் என்றதொரு கதாபாத்திரத்தை உருவாக்குவார்கள் என நினைத்துப் பார்த்ததில்லை.
என் திரையுலக வாழ்க்கையில் 'சிங்கம்' முக்கியமான படம். அப்படத்தின் 1ம், 2ம் பாகங்களுக்கு கிடைத்த வெற்றியால் 3ம் பாகம் செய்யவில்லை. இதற்காகவும் இயக்குநர் ஹரி அதிகமாக உழைத்துள்ளார். அவருடைய உழைப்பைத் தான் நான் மிகவும் வியந்து பார்க்கிறேன். இப்படத்துக்காக 120 நாட்கள் படப்பிடிப்பு, 200 படப்பிடிப்பு தளங்களில் காட்சிப்படுத்தியுள்ளோம். ஒரு இயக்குநரோடு 5 படத்தில் பணிபுரிந்துவுள்ளேன். ஹரிக்கும் எனக்கு நல்ல நட்பு உள்ளது.
இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளேன். ஜல்லிக்கட்டு விஷயத்தில் காவல்துறை மீது அதிருப்தி நிலவுகிறது என்கிறார்கள், சிலர் தவறு செய்திருக்கலாம். அவர்கள் மீது நடவடிக்கைகள் உண்டு என தெரிவித்துள்ளார்கள். அதற்காக ஒட்டுமொத்த காவல்துறையையும் குறைச் சொல்லக்கூடாது. சமூகத்தில் அவர்களுடைய பணி மிகவும் முக்கியம்" என்று பேசினார் சூர்யா.