'ஜில்லா' படத்தினை முடித்துவிட்டு தான் மற்ற படங்களுக்கு கால்ஷீட் என்று முடிவு செய்திருக்கிறார் மோகன்லால்.
'ஜில்லா' படத்தில் முதல் முறையாக விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறார் மோகன்லால். இப்படத்தின் படப்பிடிப்பு படுஜோராக சென்னை, மதுரை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.
படப்பிடிப்பிற்கு இடையே மோகன்லாலுக்கு உடம்பு சரியில்லாமல் போனது. இதனால் மோகன்லால் இல்லாமல் விஜய், காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கினார்கள்.
விஜய், மோகன்லால் மற்றும் இதர படக்குழுவினரை ஒருங்கிணைத்து இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது. மோகன்லால் நாயகனாக நடிக்கும் மலையாள படத்தின் படப்பிடிப்பும், 'ஜில்லா' தொடங்கவிருக்கும் தேதியிலே தொடங்குவதாக இருந்தது.
மலையாள படத்தின் படப்பிடிப்பினை நிறுத்தச் சொல்லிவிட்டார் மோகன்லால். 'ஜில்லா' படத்தின் தான் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தையும் படமாக்கி முடித்தவுடன் தொடங்கிக் கொள்ளலாம் என்று தெரிவித்துவிட்டார்.இதனால் 'ஜில்லா' படக்குழு பெரும் சந்தோஷத்தில் இருக்கிறது.
படுசூடாக பொங்கல் 2014ல் ரசிகர்களுக்கு விருந்து படைக்க ' ஜில்லா ' தயாராகி விடும் என்கிறது படக்குழு.