ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருக்கும் படத்தில் மகேஷ்பாபுவுக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சோனாக்ஷி சின்ஹா நடித்திருக்கும் 'அகிரா' இந்தி படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழில் வெளிவந்த 'மெளனகுரு' படத்தின் ரீமேக் தான் 'அகிரா' என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 15ம் தேதி முதல், தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்த இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். மகேஷ்பாபு நாயகனாக நடிக்கவிருக்கும் இப்படத்தின் நாயகியாக ப்ரணீதா சோப்ரா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
மேலும், இப்படத்தின் வில்லன் பாத்திரத்துக்கு பல நாயகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். இறுதியாக எஸ்.ஜே.சூர்யாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார்.
இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் படமாக்க திட்டமிட்டுள்ளார்கள். மகேஷ்பாபு தமிழில் நடிக்கும் முதல் படமாக இப்படம் அமையவிருப்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் வெளியான 'இறைவி' படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பை பலரும் பாராட்டியுள்ளார்கள். அதனைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. மேலும், எஸ்.ஜே.சூர்யா இயக்கிய 'குஷி' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் ஏ.ஆர்.முருகதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.