தமிழ் சினிமா

‘‘என்னை நடிகன் என்று கண்டுபிடித்ததே பாலச்சந்தர் தான்’’

மகராசன் மோகன்

நடிகை பிரியாவின் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ‘மாலினி 22 பாளையங்கோட்டை’ படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் கமல்ஹாசன், கே.பாலசந்தர், சூர்யா, விஜய்சேதுபதி, வியட்நாம் வீடு சுந்தரம், ராதிகா, சுஹாசினி, படத்தின் நாயகி நித்யா மேனன், படத்தின் இசையமைப்பாளர்கள் அரவிந்த் - சுந்தர், பாடலாசிரியர் நா.முத்துக்குமார் உள்ளிட்ட திரைத்துறையினர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், படத்தின் இசை குறுந்தகட்டை வெளியிட்டுப் பேசிய கமல், “இங்கே பேசிய இயக்குநர் பாலச்சந்தர், ‘அவள் ஒரு தொடர்கதை’ படம் தொடங்கி நிறைய விஷயங்களை நினைவுகூர்ந்தார். படப்பிடிப்பில் சரியாக காட்சி அமையவில்லை என்று திட்டினால் அழுதுவிடுவார்கள் என்று சொன்னார். அப்போதைய அந்த நிகழ்வுகள் எல்லாம் எனக்கும் நினைவில் இருக்கிறது. அப்போதெல்லாம் அவர் என்ன திட்டினாலும் நான் அழமாட்டேன், தப்பு செய்ததற்குத்தானே திட்டுகிறார் என்று இருப்பேன். அப்படித்தான் பிரியாவும் இருப்பார். நான் கல்லுளிமங்கன், பிரியா கல்லுளிமங்காள். பாலச்சந்தரின் இதயம் பலவீனமாக இருப்பதற்கு நாங்களும் ஒரு காரணம். அவரை எவ்வளவு பாடுபடுத்தியிருப்போம் என்று கணக்கே இல்லை. இவர் படும் பாட்டை எல்லாம் பார்த்துவிட்டு நான் ரொம்ப காலம் இயக்குநர் ஆகாமலேயே இருந்தேன்.

சமீபத்தில் சென்றுவந்த மும்பை திரைப்பட விழா நிகழ்வில் கூட என்னை, இயக்குநர் பாலச்சந்தர்தான் ஒரு நடிகனாக மெருகேற்றியதாகவும், பட்டைத் தீட்டியதாகவும் கூறினார்கள். என்னை ஒரு நடிகன் என்று கண்டுபிடித்ததே அவர்தான் என்று நான் நம்புகிறேன். அதுதான் உண்மை.

பிரியா ஒரு இயக்குநராக பிரகாசிப்பார் என்று எனக்கு முன்பே தெரியும். அந்த தகுதி வெகு ஆண்டுகளுக்கு முன்பே அவருக்கு கிடைத்துவிட்டது. அவரைச் சுற்றி நல்லவர்கள் இருக்கிறார்கள். வல்லவர்களும் இருக்கிறார்கள். கண்டிப்பாக வெற்றி பெறுவார்!” என்று கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, “தமிழ் திரைத்துறையில் பெண்கள் சார்ந்த படங்கள் நிறைய வரவேண்டும். அதேபோல பெண் இயக்குநர் துறையிலும் ஒரு வறட்சி இங்கு இருப்பதாகவே நினைக்கிறேன். ஒரு படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும் போது அதில் நினைவில் வைத்துக்கொள்ளும் விஷயங்கள் தற்போது குறைவாகவே இருக்கிறது. மனதை பாதிக்கும் படங்களை விரல்விட்டும் எண்ணும் விதமாகவே வெளிவருகிறது. பெண்களின் பங்களிப்பு வறட்சியாக இருக்கும் இந்த சூழலில் பிரியா போன்ற இயக்குநர்களின் வருகை சந்தோஷத்தை கொடுக்கிறது.

நிகழ்ச்சிக்கு வருவதற்குமுன், அஸ்ஸாமில் பெண்களின் நிலை மிகவும் கொடுமையாக இருப்பதாகவும், பாலியல் வன்கொடுமைகள் நடப்பதாகவும் ஒரு செய்தியை படிக்க நேர்ந்தது. இதை எல்லாம் பார்க்கும்போது என் குழந்தையின் தலைமுறை எப்படி இருக்குமோ என்கிற பயம் தொற்றிக்கொண்டது. சினிமாவில் என்ன எடுக்கிறோமோ, அது சமூகத்தை பாதிக்கிறது. சமூகத்தில் என்ன நிகழ்வுகள் நடக்கிறதோ அதுவே தான் சினிமாவிலும் தொற்றிக்கொள்கிறது. இப்படியான சூழலில் நல்ல நல்ல படங்களை கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பெண்களின் பங்களிப்பும் இதற்கு நிறைய வேண்டும். அவர்களும் ரௌத்திரம் பழக வேண்டும்!” என்றார்.

நிகழ்ச்சியில், கே.பாலச்சந்தர், விஜய்சேதுபதி, சுஹாசினி, ராதிகா உள்ளிட்ட பலரும் பேசினார்கள். முடிவில் படத்தின் இயக்குநர் பிரியா நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT