ரசிகர்கள், தமிழ் திரையுலகினர் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை வெகுவாகக் கூட்டியிருக்கிறது, விஜய் நடிக்கும் 'கத்தி' படத்தின் ட்ரெய்லர்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்திருக்கும் 'கத்தி' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் சமயத்தில் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. சர்ச்சைகள் தொடர்ந்ததால், படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டிலும் தாமதமானது.
அக்டோபர் 19-ஆம் தேதி ட்ரெய்லர் வெளியாகும் என்று அனிருத் ஏற்கெனவே அறிவித்திருந்தால், நேற்று காலை முதலே சமூக வலைத்தளத்தில் 'கத்தி' ட்ரெய்லர் பற்றி எப்போது என விவாதங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தன.
மதிய வேளையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், "பொறுத்தது போதும். மாலை 6 மணி முதல் 'கத்தி' ட்ரெய்லர்" என்று அறிவித்தார். இவரது இந்தத் தகவல் 4,000-க்கும் மேற்பட்டோரால் ரீ-ட்விட் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாலை 6 மணியளவில் 'கத்தி' ட்ரெய்லரைப் பகிர்ந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். 2,000-க்கும் அதிகமானோரால் ட்ரெய்லர் ரீ-ட்விட் செய்யப்பட்டது.
அதுமட்டுமன்றி, தமிழ் திரையுலகினர் பலராலும் 'கத்தி' ட்ரெய்லர் பகிரப்பட்டது. தனுஷ், சிபிராஜ், தயாநிதி அழகிரி உள்ளிட்ட பலரும் 'கத்தி' குழுவிற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். இதுவரை 'கத்தி' படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லரைப் பார்த்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்தினை தொடவிருப்பது குறிப்பிடத்தக்கது.
"இந்த வருடத்தில் மூன்று நாட்களுக்காக பெரிதும் காத்திருக்கிறேன். 'கத்தி', 'அனேகன்' மற்றும் 'பி.கே'" என தனுஷ் குறிப்பிட்டு இருக்கிறார்.