தனக்கு பிரிட்டன், ஸ்பானிஷ் மற்றும் ஹாலிவுட் பட வாய்ப்பு வந்ததாகவும், ஆனால் நடிக்க மறுத்துவிட்டதாகவும் தனுஷ் கூறியிருக்கிறார்.
தமிழ் மட்டுமல்லாது இந்தி திரையுலகிலும் தனுஷிற்கு நடிக்க வாய்ப்புகள் குவிகிறது. ஆனால் படங்களை மிகவும் பொறுமையாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.
தற்போது தமிழில் 'வேலையில்லா பட்டதாரி', வெற்றிமாறன் இயக்கும் படம், 'அனேகன்' மற்றும் இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கும் அடுத்த படம் என வரிசையாக படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இந்நிலையில் டி.வி ஷோ ஒன்றில் கலந்து கொண்ட தனுஷ், தனக்கு ஹாலிவுட் வாய்ப்பு வந்ததாகவும், ஆனால் நடிக்க மறுத்துவிட்டதாகவும் கூறினார்.
“எனக்கு பிரிட்டன், ஸ்பானிஷ் மற்றும் ஹாலிவுட் பட வாய்ப்புகள் வந்தது. படத்தின் முழுக்கதையையும் எனக்கு அனுப்பியிருந்தார்கள். ஆனால், அச்சமயத்தில் எனக்கு இங்கு படப்பணிகள் நிறைய இருந்ததால், நடிக்க முடியாமல் போய்விட்டது.
தேசிய விருது என்றபோது, இந்தி திரையுலகில் அறிமுகமாகும் போதும் சிரித்தார்கள். அதைப் போல ஹாலிவுட் என்றவுடனும் சிரிப்பார்கள். எனக்கே சிரிப்பு தான் வருகிறது. ஆனால், என்னைப் பொருத்தவரை எதுவும் சாத்தியம் தான். எதுவும் முடியாததல்ல.
நான் இயக்குனரானால் ரஜினி, சிவகார்த்திகேயன், அனிருத், கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஆகியோரை இயக்க ஆசை. அனிருத்திற்கு நிறைய படவாய்ப்புகள் வந்து குவிகிறது. ஆனால் நான் தான் இப்போதைக்கு இசை யில் மட்டுமே அவர் கவனம் செலுத்தவேண்டும் என பிடித்து வைத்திருக்கிறேன்.
அனிருத்திற்கு பலர் கதை தயார் செய்து, நாயகனாக நடிக்க அழைக்கிறார்கள். ஏன், அனிருத்திற்கு என்னிடமே கூட முழுக்க தயாரான கதை இருக்கிறது.” என்று தெரிவித்திருக்கிறார்.