'கபாலி' படத்தைப் பார்த்துவிட்டு தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக தன்னிடம் ரஜினிகாந்த் கூறியதாக, அப்படத்தின் இயக்குநர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
உஷா கிருஷ்ணன் இயக்கத்தில் கலையரசன், காளி வெங்கட், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ராஜா மந்திரி'. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் படக்குழுவினரோடு 'கபாலி' இயக்குநர் ரஞ்சித்தும் கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து ‘கபாலி’ குறித்து பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
அதில், "இவ்வளவு பெரிய வரவேற்பை நான் எதிர்பார்க்கவில்லை. படத்துக்கு பயங்கர எதிர்பார்ப்பு இருக்கிறது. டீஸர் வெளியாகி கிடைத்த வரவேற்புக்குப் பிறகு தான், நாம் சரியாகத் தான் வேலை செய்திருக்கிறோம் என்ற நம்பிக்கை வந்தது.
படமும் நிச்சயமாக மக்களுக்குப் பிடித்த படமாக இருக்கும். அப்படித்தான் நானும், ரஜினி சாரும் நம்புகிறோம். ரஜினி சார் படம் பார்த்துவிட்டார். அவருக்கு ரொம்பப் பிடித்த படம் என்று சொன்னார்" என்று இயக்குநர் ரஞ்சித் தெரிவித்திருக்கிறார்.
"உங்களை சமூக ரீதியாகவும், ரஜினியை மொழி ரீதியாகவும் சமூக வலைதளங்களில் சிலரால் பகிரப்படும் கருத்துகள் குறித்து கேட்டதற்கு, "அதில் கருத்து சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. அப்படி சொன்னால் அவர்கள் அவ்வளவு தான்" என்று தெரிவித்திருக்கிறார் இயக்குநர் ரஞ்சித். அதாவது, அத்தகைய கருத்து கூறுபவர்களின் தரம் அந்த அளவில்தான் இருக்கிறது என்று பொருள்படும்படி கூறியுள்ளார்.