சமூக வலைதளத்தில் சமீபத்தில் டீஸர், ட்ரெய்லருக்குப் பெரும் வரவேற்பை பெற்றுள்ள சிறுமுதலீட்டுப் படம் ‘உரு’. அதன் இயக்குநர் விக்கி ஆனந்திடம் பேசியதில் இருந்து..
‘உரு’ என்ற தலைப்பே வித்தியாசமாக இருக்கிறதே.
‘உருவம்’ என்பதன் சுருக்கம் தான் ‘உரு’. இதற்கு ‘பயம்’ என்ற அர்த்தமும் உண்டு. முழுக்க முழுக்க பயத்தை மையமாக வைத்து நகரும் கதை என்பதால் இந்தத் தலைப்பை தேர்வு செய்தோம்.
பேய் சீசன் உங்களையும் தாக்கிவிட்டதா? டீஸரை பார்த்தால் இதுவும் பேய் படம் போலத் தெரிகிறதே..
பேய் படங்கள் நிறைய வெளியாகி, ஒருவழியாகப் பேய் கதை சீசன் முடியப்போகிறது. இதற்கிடையில், பேய் இல்லாமலே எப்படி பயமுறுத்தலாம் என்று வித்தியாசமாக செய்திருக்கிறோம். ‘விசாரணை’ படம் பார்த்தபோது, அனைவரிடமும் ஒரு படபடப்பு இருக்கும். அதுபோல, படம் பார்க்கும் அனைவருமே பயப்பட வேண்டும் என்ற நோக்கில் எடுக்கப்பட்டதுதான் ‘உரு’. இது பேய் இல்லாமல் உருவாகியுள்ள திகில் படம்.
கதைக்களம் என்ன?
கலையரசன் நாவல் எழுத்தாளர். குடும்ப உறவுகளுக்கு மதிப்பளித்து எழுதக்கூடிய வர். திடீரென, ‘ஹாரி பாட்டர்’ போன்ற நாவல்களால் மக்களின் ரசிப்புத்தன்மை மாறியதில், மார்க்கெட்டை இழந்துவிடுகி றார். அவரது புத்தகங்கள் இனிமேல் வெளிவராது என்ற சூழல். புதுமையாக ஏதாவது எழுதினால் மட்டுமே பிழைக்க முடியும் என்ற நிலை வருகிறது.
அப்போது ஒருநாள் முழுக்க பார்த்த விஷயங்களைக் கோர்த்துக் கதை யாக உருவாக்குகிறார். த்ரில்லர் கதை என்பதால், பதிப்பாளர்களும் ஊக்குவிக்கி றார்கள். த்ரில்லர் கதையை எழுத மேக மலைக்குப் பயணித்து எழுதத் தொடங்கு வார். அங்கு எதிர்பாராதவிதமாக சில அசம்பாவித சம்பவங்கள் நடக்கும். தன் வாழ்க்கை மட்டுமல்லாது, சுற்றி இருப்பவர் களின் வாழ்க்கையையும் ஆபத்தில் தள்ளி யுள்ளோம் என அப்போதுதான் அவருக்கு தெரிகிறது. அந்த ஆபத்தில் இருந்து எப்படி வெளியே வருகிறார் என்பதுதான் கதை.
டிசம்பரில் கடும் குளிரில் படப்பிடிப்பு நடத்தினீர்களாமே..
மொத்தப் படப்பிடிப்பையும் 32 நாட்களில் முடித்துவிட்டோம். கொடைக்கானல், மேக மலையில் படமாக்கியுள்ளோம். குளிரில் நடுங்குவதுபோல நடிப்பதைவிட, உண்மை யாகவே நடுங்கும் குளிரில் படமாக்கினால் இயல்பாக இருக்கும். அதனால்தான் கொடைக்கானல் படப்பிடிப்பை டிசம்பரில் நடத்தினோம். இரவு 9 மணி ஆனாலே 8 டிகிரி குளிருக்குச் சென்றுவிடும். அந்தக் கடும் குளிரில் மழை எஃபெக்டில் படப் பிடிப்பு செய்ததை மறக்கவே முடியாது.
கலையரசன் - தன்ஷிகா இருவருமே கொஞ் சம்கூட முகம் சுழிக்காமல் நடித்துக் கொடுத்தார்கள். ஹீட்டர், 6 டவல், ஹீட் பேக் என எல்லாம் தயாராக இருக்கும். மழையில் நடித்துவிட்டு, ஓடிவந்து துடைத்துக்கொண்டு ஹீட்டர் போட்டு உட்கார்ந்து கொள்வார்கள்.
டீஸர் பார்த்துவிட்டு ரஜினி என்ன சொன்னார்?
காலை 10:45 மணிக்கு சந்திக்க நேரம் கொடுத்திருந்தார். ஒரு ரசிகனாக எட்டரை மணிக்கே போய் நின்றுவிட்டேன். கலையரசன், தன்ஷிகா இருவரையும் உள்ளே அழைத்துப் பேசினார்கள். அப்போது லேப்டாப் எல்லாம் எடுத்துவைத்துத் தயாராகிக் கொண்டிருந்தேன். திடீரென ரஜினி சார் உள்ளே வந்தவுடன், எனக்கு என்ன செய்வதென்று தெரியாமல் ஆசிர்வாதம் வாங்கினேன். என் பக்கத்தில் உட்கார்ந்து டீஸரை பார்த்தார். ‘‘காட்சி உருவாக்கம் அற்புதமா இருக்கு. திகில் நிறைய இருக்கு. கண்டிப்பாக நல்லா வரும்’’ என்று வாழ்த்தினார். ‘‘இது பேய் படம் கிடையாது’’ என்பதை அனைவருக்கும் புரியவைத்துவிடுங்கள் என்று ரஞ்சித் கூறினார்.
‘சீக்ரெட் விண்டோ' படத்தின் தழுவல் என கூறப்படுகிறதே..
‘என் படத்தை லட்சம் பேர் பார்க்கிறார்கள் என்றால், அவர்கள் லட்சம் படத்தை பார்ப்பார்கள்’ அமெரிக்க இயக்குநர், நடிகர், எழுத்தாளரான குவென்டின் டாரன்டினோவின் இந்த மேற்கோளை படத்தின் தொடக்கத்திலேயே போட்டுள்ளேன். இந்தப் படம் ஒரே படத்தின் பாதிப்பு என்று கூறமுடியாது.
நான் படித்த புத்தகங்கள், பார்த்த படங்கள், கார்ட்டூன்கள் மற்றும் பல படங்களின் பாதிப்புதான் இப்படம். ‘பேட்மேன்’ காமிக்ஸ் புத்தகத்தின் தாக்கத்தை வைத்து படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை உருவாக்கியுள்ளேன். அந்த ‘சீக்ரெட் விண்டோ’ படத்தை இன்னும் பார்க்கவில்லை.
தன்ஷிகா. | கலையரசன்