தமிழ் சினிமா

வெங்கட்பிரபு தயாரிப்பில் உருவாகும் ஆர்.கே.நகர்

ஸ்கிரீனன்

'சென்னை 28' 2-ம் பாகத்தைத் தொடர்ந்து வெங்கட்பிரபு தயாரிப்பில் உருவாகும் படத்துக்கு 'ஆர்.கே.நகர்' என பெயரிட்டுள்ளார்கள்.

ஜெய், சிவா, வைபவ், மகத், அஞ்சனா கீர்த்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான படம் 'சென்னை 28- 2'. புதிதாக 'ப்ளாக் டிக்கெட் கம்பெனி' என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி தயாரித்திருந்தார் வெங்கட்பிரபு.

அப்படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த தயாரிப்புக்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படக்குழுவாக அறிவிப்பதாகவும் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார் வெங்கட்பிரபு.

அதன்படி, வெங்கட்பிரபுவின் தயாரிப்பில் உருவாகவுள்ள 2வது படத்தை இயக்கவுள்ளார் சரவணராஜன். இவர் வெங்கட்பிரபுவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். மேலும் 'வடகறி' என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.

'ஆர்.கே.நகர்' எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தின் நாயகனாக வைபவ் ஒப்பந்தமாகியுள்ளார். நாயகியாக சனா, வில்லனாக சம்பந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். சமீபத்தில் தமிழகத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பெரும் சர்ச்சையானது. பணப்பட்டுவாடா உறுதியானதைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையே ரத்து செய்தது தேர்தல் ஆணையம்.

தற்போது 'ஆர்.கே.நகர்' என்று தனது தயாரிப்புக்கு வெங்கட்பிரபு பெயரிட்டுள்ளதால், படக்குழுவினருக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

SCROLL FOR NEXT