விஜய் நடித்திருக்கும் 'ஜில்லா' படத்திற்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம். இத்தள்ளுபடியால் நாளை 'ஜில்லா' வெளியாவது உறுதியாகி இருக்கிறது.
நேசன் இயக்கத்தில் விஜய், மோகன்லால் நடிப்பில் தயாராகி இருக்கும் 'ஜில்லா' நாளை உலகமெங்கும் வெளியாகிறது. இதற்கான பணிகளை படக்குழு படுதீவிரமாக செய்து வரும் வேளையில், சிவில் நீதிமன்றத்தில் 'ஜில்லா' படத்திற்கு தடைக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனால் 'ஜில்லா' குழுவினர் அதிர்ச்சியடைந்தார்கள்.
சோலையூரைச் சேர்ந்த ஆர். மகேந்திரன் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், "சவுமிதா ஸ்ரீ ஆர்ட்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறேன். நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகை ஸ்ரேயா ஆகியோர் தெலுங்கில் நடித்த ‘பகீரதா‘ என்ற படத்தை தமிழில் ‘ஜில்லா’ என்ற பெயரில் மொழியாக்கம் செய்தேன். ‘ஜில்லா’ என்ற தலைப்பை தென்னிந்திய திரைப்பட சங்கம் மற்றும் டி.வித் தொடர் தயாரிப்பாளர் கில்டில் 2008-ம் ஆண்டு பதிவு செய்தேன். தமிழாக்கம் செய்யப்பட்ட ஜில்லா படத்தை திரையரங்குகளில் வெளியிட தணிக்கை சான்றிதழை 28-5-2008 அன்று பெற்றுள்ளேன். இந்த படத்தை வெளியிட தகுந்த நேரத்தை பார்த்து காத்திருந்தேன். இந்நிலையில், நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜில்லா’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட படம் வருகிற 10ம் தேதி வெளியாகப் போவதாக பத்திரிக்கையில் விளம்பரம் வெளியாகியுள்ளது. எனவே விஜய் நடித்துள்ள ஜில்லா என்ற பெயரில் படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும்." என்று கூறியிருந்தார்.
இவ்வழக்கை இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வக்கீல்கள் தங்களது வாதங்களை முன்வைத்தார்கள். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி "நடிகர் விஜய் நடித்துள்ள ஜில்லா 10–ந்தேதி (நாளை) வெளியாக உள்ளது. மனுதாரர் இறுதி நேரத்தில் நீதிமன்றத்தினை நாடியுள்ளார். எனவே ஜில்லா படத்திற்கு தடை விதிக்க முடியாது. ஜில்லா தலைப்பிற்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்கிறேன்” என்று கூறினார்.
வழக்கு தள்ளுபடி ஆனதால், 'ஜில்லா' படக்குழு நிம்மதி பெருமூச்சி விட்டிருக்கிறார்கள். இதனால் 'ஜில்லா' திரைப்படம் எந்தவித தடையுமில்லாமல் நாளை (ஜனவரி 10) வெளியாவது உறுதியாகி இருக்கிறது.