'அஞ்சான்' படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுக்கு விருந்தளித்து ஆச்சர்யம் கொடுத்துள்ளார் நடிகர் சூர்யா.
சூர்யா, சமந்தா உள்ளிட்ட பலர் நடிக்கும் 'அஞ்சான்' படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, யுவன் இசையமைத்து வருகிறார். லிங்குசாமி தயாரித்து இயக்கி வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருக்கும் போது, மத்திய அரசு ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவித்தது.
இந்நிலையில் பத்ம ஸ்ரீ விருது வாங்கிய சந்தோஷ் சிவனுக்கு விருந்தளித்து ஆச்சர்யமூட்டி இருக்கிறார் சூர்யா. இது குறித்து சந்தோஷ் சிவன் "பத்ம ஸ்ரீ விருது வாங்கியதற்காக நடிகர் சூர்யா மும்பையில் விருந்தளித்து ஆச்சர்யமூட்டினார்" என்று தனது ட்விட்டர் தளத்தில் கூறியுள்ளார்.
இவ்விருந்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் சந்தோஷ் சிவனிடம் விருந்து குறித்து எதுவும் தெரிவிக்க கூடாது என்று அழைத்திருக்கிறார் சூர்யா. இவ்விருந்தில் மாதவன், தனுஷ், பிரபுதேவா, ஸ்ருதிஹாசன், அனிருத் மற்றும் 'அஞ்சான்' படக்குழுவினர் கலந்து கொண்டார்கள்.
தொடர்ச்சியாக 'அஞ்சான்' மும்பையில் வேகமாக வளர்ந்து வருகிறான்.