பாகிஸ்தானிலிருந்து கார்த்தி தப்பிக்கும் காட்சியின் பின்புலம் குறித்து 'காற்று வெளியிடை' படக்குழு விளக்கம் அளித்துள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதிராவ், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'காற்று வெளியிடை'. மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஏப்ரல் 7ம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. மேலும், பாகிஸ்தானிலிருந்து சர்வ சாதாரணமாக கார்த்தி தப்பித்து வரும் காட்சி நம்பும்படியாக இல்லை என்று சமூகவலைத்தளத்திலும், விமர்சனத்திலும் குறிப்பிட்டு இருந்தார்கள்.
இதற்கு 'காற்று வெளியிடை' படக்குழு விளக்கம் அளித்துள்ளது. அதில் "அக்காட்சிக்கு பின்னால் ஒரு உண்மைக் கதை உள்ளது. 1971-ம் ஆண்டு இந்திய விமானப்படையின் திலீப் பாரூல்கரை பாகிஸ்தான் சுட்ட போது, அந்த ஆபத்தை தனது வாழ்க்கையின் பெரும் சாகசமாக மாற்றிக் கொண்டார். 1972ம் ஆண்டில் மல்விந்தர் சிங் கிரேவால், ஹரிஷ் சின்ஜி ஆகியோருடன் பாரூல்கர் ராவல்பிண்டியிலிருந்த போர்க் கைதிகளுக்கான முகாமிலிருந்து தப்பித்தார்.
'Four Miles to Freedom'(விடுதலையை நோக்கிய 4 மைல்கள்) என்ற புத்தகம் அவர்களுடைய கதை தான். அந்த புத்தகத்திலிருந்து சில சம்பவங்களை 'காற்று வெளியிடை' படக்குழு இரவல் வாங்கி காட்சிப்படுத்தியுள்ளோம். இதன் மூலமாக கார்த்தி மற்றும் அவருடைய நண்பர்கள் தப்பிக்கும் காட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்கள்.