விஜய் நடித்துள்ள ‘பைரவா’ படத்துக்கு தடை விதிக்க உரிமை யியல் நீதிமன்றம் மறுத்துள்ளது.
இது தொடர்பாக சேலம் மாவட்டம் மேட்டூர் அணையைச் சேர்ந்த இயக்குநர் ஜி.பொருள்தாஸ் என்பவர் சென்னை 11-வது உதவி மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்ப தாவது:
நான் கடந்த 15 ஆண்டுகளாக திரைப்பட இயக்குநராக பணிபுரிந்து வருகிறேன். நான் ‘பைரவா’ என்ற தலைப்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே நாயின் சாகசங்களை வெளிப்படுத்தும் வகையில் அனிமேஷன் திரைக்கதை ஒன்றை எழுதியுள்ளேன். தலைப்பையும் பதிவு செய்து வைத்துள்ளேன்.
‘பைரவா’ என்ற தலைப்பு 2017-ம் ஆண்டு ஜன.29 வரை எனது பெயரில் உள்ளது. அந்த படத்துக்கான படப்பிடிப்பை 50 சதவீதம் முடித்துள்ளேன். இந்நிலை யில் நடிகர் விஜய் நடித்துள்ள படத்துக்கு ‘பைரவா’ என்ற தலைப்பை வைத்துள்ளனர். இது தொடர்பாக உடனடியாக சம்பந்தப் பட்டவர்களை அணுகி முறையிட் டேன். அவர்களும் இதுகுறித்து பரி சீலிப்பதாக உறுதியளித்திருந்தனர். இந்நிலையில் ‘பைரவா’ திரைப் படத்தை 12-ம் தேதி திரையிடுவதால் எனக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும். எனவே இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் வரை ‘பைரவா’ திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த மாநகர உரிமையியல் நீதிமன்ற உதவி நீதிபதி டேவிட் ஹரிதாஸ், மனுதாரர் கடைசி நேரத்தில் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். இந்த மனுவில் எதிர்தரப்பின் கருத்தைக் கேட்காமல் தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக்கூறி வழக்கின் விசாரணையை நாளை வரை தள்ளி வைத்து உத்தரவிட்டார். மேலும், இதுதொடர்பாக ‘பைரவா’ படத்தின் தயாரிப்பாளரான விஜயா புரொடக்க்ஷன் நிறுவனத்தினர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கூடுதல் கட்டணம்
‘பைரவா’ படம் தொடர்பாக சென்னை செம்பியத்தைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள மற் றொரு மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த 2009 மே மாதம் 20-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஒரு அரசு ஆணையில், திரையரங்குகளின் கட்டணம் திருத்தி அமைக்கப்பட் டுள்ளது. ஆனால் நிர்ணயித்த கட்டணத்தை விட திரையரங்குகளில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப் படுகிறது. இந்நிலையில் 12-ம் தேதி (நாளை) நடிகர் விஜய் நடித்த ‘பைரவா’ படம் திரைக்கு வரவுள்ளது. அந்தப் படத்துக்கும் கூடுதலாக கட்டணம் வசூலிக்க திரையரங்கு உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர். எனவே ‘பைரவா’ படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க தடையுத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி டி.ராஜா முன்பு நடந்தது. அப்போது நீதிபதி, இது தொடர்பாக நாளைக்குள் (ஜன.12) படத்தின் தயாரிப்பாளர், திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம், திரை யரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழக அரசு ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசா ரணையை தள்ளி வைத்தார்.